வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

சீர்பாத குல வரலாறு


சீர்பாதர் சரித்திரம்

பண்டைய காலத்திலிருந்தே இலங்கை ஆசியாக்கண்டத்தில் மிகவும் பிரபல்யம்
 வாய்ந்த நாடாக விளங்குகின்றது. மன்னராட்சி படையெடுப்புக்கள் என்பனவும்
 மாறி மாறி நிகழ்ந்தமையினையும் இலங்கை வரலாற்றில் இருந்து காணமுடியும்.
 இராமாயணம் என்கின்ற ஆதிகாவியத்தின் மூலமாக இராவணண் என்கின்ற
பழம் பெரும் மன்னன் ஒருவன் இலங்கையினை ஆட்சி செய்தமையும் அவன்
 ஒரு சிறந்த சிவ பக்தன் என்பதனையும் அறிவதோடு இவன் மூலமாக நாம்
 இலங்கையில் இந்து மதம் ஆதி காலந் தொட்டே நிலவி வருகின்றமையினையும்
 அறியலாம். மேலும் இலங்கையில் இந்து மதம் புராதன காலந்தொட்டு இருந்து
வருகின்றதென்பதற்கு இலங்கை வரலாறு பற்றி கூறுகின்ற மகாவம்சம்
 ஆதாரமாக உள்ளது. இலங்கையிலும் சமயச்சின்னங்களை நாணயங்களில்
பொறிக்கின்ற இந்திய மரபு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் முதலாக நிலவி
வந்தமைக்கு தற்கால தொல்பொருள் சான்றுகள் ஆதாரமாக அமைகின்றன.
இந்நாணயங்களில் இந்து மதத்தை பிரதிபலிக்கின்ற திரிசூலம் வேல் இடபம் மயில்
கருடன் சிவலிங்கம் உருத்திராக்கம் முதலிய சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றமை
இலங்கையில் இந்து மதத்தின் புராதனத்திற்கு சான்று.

ஆதிகாலத்தில் இலங்கையை ஆண்ட அரசர்கள் சைவசமயத்தோடு நெருங்கிய
 தொடர்பு கொண்டிருந்தமைக்கான சான்றினை நோக்குகின்றபோது மகாவம்சத்தின்
 உரை நூலான “வம்சத்தப்பகாசினி” கூறுகின்ற கருத்தின்படி அநுராத
 புரத்தினை அமைத்த போது அங்கே “சிவிகசாலா” என்பதனை பண்டுகாபயன்
 கட்டு வித்தான் எனவும் இது சிவலிங்கத்தை வைத்து வழிபடும் இடம்
 எனவும் அறிய முடிகின்றது. இத்தகைய புராதன ஆதாரங்கள் மூலமாக
 நாம் இலங்கை இந்து மதப்பழமை பற்றி அறியலாம்.


பக்தி மற்றும் சமய வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற
வாழ்க்கை முறையினைக் கொண்ட மக்கள் சமூதாயம் இலங்கையில்
 ஆதி காலந்தொட்டே வாழ்ந்து வந்திருக்கின்றது. இவ்வாறான
பண்புகளைக் கொண்ட மக்களின் தேவைகளையும் நலன்களையும்
 நிறைவேற்றுவதனை இலக்காக கொண்டு அக்கால மன்னர்கள்
 தங்களின் செங்கோல் ஆட்சியினையும் நிலைநாட்டியிருக்கின்றனர்.
 இவ்வாறான ஆட்சியின் சின்னங்களாக வியக்கத்தக்க
வகையிலான வேலைப்பாடுகளைக் கொண்ட ஆலயங்கள் பலவற்றினையும்
 இம்மன்னர்கள் அமைத்திருக்கின்றனர். இவ்வாலயங்களில் பல
 இடையிடையே ஏற்பட்ட படையெடுப்புக்கள் அந்நியரின்
ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றின் விளைவாக அழிந்து போயுள்ளதோடு
 சில ஆலயங்கள் அம்மன்னர்களின் நினைவுச்சின்னங்களாக 
இன்னும் சரித்திரப்பிரசித்தியோடு விளங்குகின்றன.

இன்றையை உலகில் எத்தனையோ ஆலயங்கள் புதிதாக தோற்றம்
 பெற்றபோதும் பழம் பெருமையினையும் வரலாறுகளையும்
கொண்ட ஆலயங்களே ஏனைய ஆலயங்களுக்கு முன்னோடியாகவும்
 வழி காட்டியாகவும் விளங்குகின்றன என்பது உண்மை. அவ்வாறு
 பழமை வாய்ந்த ஆலயங்களும் அதனோடு தொடர்புபட்ட மக்கள்
 சமுதாயமும் அவ்வாலயத்தின் பழமைக்கேற்றவாறும் அவர்களின்
முன்னோரின் பண்பாடு கலாசாரங்களை பிரதிபலிக்கின்ற வகையிலும்
தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்து அவ்வாலயத்தினை அண்டிய
பிரதேசங்களில் வாழ்கின்றமையினையும் காணலாம்.

உக்கிரமசிங்கன் ஆட்சி

இன்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கொடிய காட்டுப்பகுதியாகவே
 காணப்பட்டது. இதில் மனிதர்கள் என்று சொல்வதற்கு சில வேடர்கள் மாத்திரமே
 இருந்தனர். இவ்வாறு வனாந்திரமாக காணப்பட்ட இலங்கையில் வங்கதேசத்து 
சத்திரி மரபில் பிறந்து இலாட தேசத்தை அரசாண்ட சிங்கவாகுவின் குமாரனான
 விஜயன் தன் கூட்டத்தாரோடு குடியேறி அரசாட்சியினை ஆரம்பித்தான். 
இந்தவகையில் இவன் இலங்கை அரசாட்சி வரலாற்றில் முக்கிய மன்னனாக 
விளங்குகின்றான். விஜயன் பல ஆண்டுகள் அரசாண்டு அதன் பின்னர் அவனுடைய
 பரம்பரையை சேர்ந்த சில மன்னர்கள் ஆட்சிபீடமேறியுள்ளனர். இவர்களில் 
விஜயனின் சகோதரன் மரபில் தோன்றிய உக்கிரசிங்கன் என்னும் மன்னன் 
தனித்துவம் வாய்ந்த ஒருவனாக காணப்படுகின்றான். இவன் பெரும் படை கொண்டு
 வந்து நடாத்திய போராட்டத்தின் விளைவாக சில தலைமுறைகளாக இழந்து கிடந்த 
அரசாட்சியின் ஒரு பகுதியினை கைப்பற்றி கதிரமலையிலிருந்து அரசாண்டு வந்தான்.
 இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது.


விஜயனுடைய பரம்பரையில் தோன்றியவனாகையால் உக்கிரசிங்கன் வீரம் நிறைந்த
 மன்னனாகவும் அரசர்க்குரிய இலக்கணங்கள் வாய்க்கப் பொற்றவனாகவும்
 துணிச்சலோடு செயற்படக்கூடிய தன்மை கொண்டவனாகவும் காணப்பட்டான். வேற்று
 அரசர்களின் படையெடுப்பு காரணமாக உக்கிரசிங்கனின் படையெடுப்புக்கு முன்னர் 
நாகநாட்டு மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். இவ்வாறான தத்தளிப்புக்கு
 மத்தியில் உக்கிரசிங்கனின் அரசாட்சியானது நாக நாட்டில் முக்கியம் வாய்ந்ததொரு
 செங்கோல் ஆட்சியாக காணப்பட்டது.


 அக்காலத்தில் மன்னர்களின் ஆட்சியானது பொதுவானதொரு கட்டுக்கோப்பினை
 கொண்டதாக காணப்பட்டது. இப்பொதுவான கட்டுக்கோப்பினை மீறிய அரசர்களின் ஆட்சியினை 
 மக்கள் ஏற்றுக் கொள்ளாததோடு அவ்வாறான அரசர்களின் ஆட்சி நீண்டகாலம்
 நிலைத்திருக்கவும் இல்லை என்பது வரலாற்றில் காணப்படுகின்ற உண்மை.


பொதுவான கட்டுக்கோப்பு என்னுமிடத்து ஒரு மன்னனானவன் மக்களோடு ஒன்றியவனாகவும்
 மக்களின் குறை நிறைகளில் அக்கறை கொண்டவனாகவும் நீதியின் வழி தன் ஆட்சியினை
 வழி நடத்துபவனாகவும் சிறந்ததொரு நீதிமானாகவும் வறுமைப்பிடிக்குள் 
நாட்டினை வாட்டாது தடுப்பவனாகவும் அமைதியான சூழ்நிலையினை தன் செங்கோல் 
ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்துபவனாகவும் அந்நியப்படையெடுப்புக்களை 
வெற்றியுடன் முறியடிப்பவனாகவும் சிறந்ததொரு படைத்தளபதியாகவும் வீரம் 
பொருந்தியவனாகவும் கடவளுக்கு அடுத்ததாக வைத்துப்பார்க்கக்கூடிய பண்புகள் 
கொண்டவனாகவும் நாட்டிலே தன்னாட்சிக்காலத்தில் சிறந்த நிர்மாணப்பணிகளை 
மேற்கொள்பவனாகவும்; கலை, கல்வி, பண்பாடு ஒழுக்கம் போன்றவற்றில்
 தனக்கு நிகர் இல்லாதவனாகவும்; சிறந்த பக்திமானாகவும் இருக்கவேண்டும். இவ்வாறான
 பண்புகள் ஒரு மன்னனிடம் காணப்படவேண்டிய அடிப்படை பண்புகளாகும்.
மேற்படி கட்டுக்கோப்பினை மீறாதவனாகவே உக்கிரசிங்கன் காணப்பட்டான். 8ம்
 நூற்றாண்டில் சிறந்த ஒரு ஆட்சியினை இலங்கையில் வழங்கிய மன்னன் என்ற 
பெருமை இன்னும் அழியாமல் கொண்டவனாக உக்கிரசிங்கன் புகழ் விளங்குகின்றது.


கதிரமலை அரியாசனத்தில் வீற்றிருந்த உக்கிரசிங்கன் சிறந்ததொரு பக்திமானாக காணப்பட்டான்.


 இவன் இறைவழிபாடு இறை நம்பிக்கை என்பன வாய்க்கப் பெற்றவனாக காணப்பட்டான்.
 கீரிமலையில் எழுந்தருளியிருக்கும் நகுலேஸ்வரப் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு 
கொண்டிருந்தான். முழுமதி தினத்தன்று கதிரமலையிலிருந்து கீரிமலைக்கு வந்து 
அங்குள்ள புனித நீரூற்றில் நீராடி நகுலேஸ்வரப் பெருமானை வழிபடுவதை இவன்
 வழக்கமாக கொண்டிருந்தான். உக்கிரசிங்கன் கொண்டிருந்த பக்தி நெறிக்கு 
இச்சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு.அக்கால மன்னர்கள் பலங்கொண்டவர்களாகவும்
 எதிரிப்படைகளை புறமுதுகு காட்டிஓட வைக்கின்ற வீரர்களாகவும் இருந்தாலும்
 அவர்கள் காதல் என்கின்ற இன்ப வேதனைக்கு ஆளாகியிருக்கின்றமையினை
 மன்னர்கள் வரலாற்றிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது.


மன்னர்கள் தங்களின் அரண்மனையில் அந்தப்புரம் எனும் பகுதியினை அமைத்து
 அங்கு அழகிய மங்கையர்களை வைத்து ஆடல் பாடல் போன்ற இன்ப
 நிகழ்வுகளினால் மகிழ்ச்சியுற்றனர். இது மன்னர்கள் காதல் வயப்பட்டவர்கள் 
என்பதற்குச் சான்று. இவ்வாறான காதலின் காரணமாக எழில் மோகன மங்கையொருத்தியின்
பால் தன் மனதினைப் பறிகொடுத்த நிலையினை உக்கிரசிங்கனிடமும் காணலாம்.


சோழ தேசாதிபதியாகிய திசையுக்கிர சோழன் மகளாகிய மருதப்புர வல்லி 
என்கின்ற இளவரசி கொடுமையான குன்ம நோயினால் பாதிக்கப்பட்டு அவளுடைய 
அழகிய வதனம் குதிரை முகமாக மாறி சோர்ந்து போய் காணப்பட்டது. இவ்வாறான
 கொடிய வியாதியினால் பாதிக்கப்பட்ட தன் மகளின் நிலைமை 
திசையுக்கிரசோழனுக்கு மனக்கவலையினை உருவாக்கியது. அரண்மனையில்
 மயில் போன்று உலா வரவேண்டியவள் தன் அழகுடலால் ஆடவர்களை கவர்ந்திழுக்க 
வேண்டிய அரச குமாரி; அயல் நாட்டு மன்னர்கள் போட்டியிட்டுக்கொண்டு மணம் முடிக்க
 வேண்டிய இளமங்கை; இவ்வாறான தொரு நோயினால் பீடிக்கப்பட்டிருப்பது எந்த தந்தைக்குத்ததான்
 துன்பத்தினை தராது? அரசசபையிலே இருக்கின்ற சிறந்த வைத்தியர்கள் மாத்திரமன்றி 
ஏனைய நாடுகளைச்சேர்ந்த எத்தனையோ வைத்தியர்கள் வந்தும் அந்த
 நோயினை தீர்க்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த மருதப்புரவல்லி
 இந்நோயினை வைத்தியர்கள் எவரும் குணமாக்க முடியார் என்று நினைத்து தீர்த்த
 யாத்திரை சென்று புனித தீர்த்தங்களில் நீராடிப்பார்த்தாலாவது இந்நோய் குணமடையும்
 என்ற நம்பிக்கையுடன் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து புறப்பட்டு புனித தீர்த்தங்களில் நீராடி
 வந்தாள்.


இவ்வாறு நீராடி வரும் காலத்திலே சாந்தலிங்க சுவாமி என்னும் சந்நியாசி கண்டு உன் 
வியாதியானது வைத்தியர்களால் குணமாக்க முடியாதது, இதற்கு உன்னுடைய தீர்த்த
 யாத்திரையே பயன் தரத்தக்கது என்று கூறி இலங்கையின் வட முனையிலே கீரிமலையென்னும் 
ஓர் இடமுண்டு அங்கு இருக்கின்ற புனித தீர்த்தத்தில் நீராடி அங்கு சில காலம் 
தங்கியிருந்தால் குணமடைவாய் என்று கூறினார்.


கீரிமலை நீரூற்றானது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நீரூற்றாக விளங்கியது. ஈழத்திலும் 
தமிழகத்திலும் இதன் பெருமை பாராட்டப்பட்டது. இது பல அற்புதங்களும் 
பெருமைகளும் வாய்க்ப்பெற்றதொரு நீரூற்றாக விளங்கியது. திரோதாயுகத்தில் 
பரமேஸ்வரனும் பார்வதியும் இமய மலையில் எழுந்தருளினர் அக்காலத்தில் பார்வதி 
நீராடுவதற்காக இத்தீர்த்தம் உருவானதாக புராணங்கள் கூறுகின்றன. இதில் தேவர்களும்
 முனிவர்களும் நீராடி புண்ணியம் எய்தியமையால் புண்ணியாபுரம் என்கின்றதொரு பெயரும் 
இவ்விடத்திற்கு வழங்கப்படலாயிற்று. நகுல முனிவர் என்பவர் இத்தீர்த்தத்தில் நீராடி 
 நகுலேஸ்வரப் பெருமானை வழிபட்டதால் அவருடைய கீரிமுகம் மாறி மனித சுபாவம் 








கிடைத்ததாக வரலாறு கூறுகின்றது. இது மாத்திரமன்றி நிடத நாட்டு அரசனான நளமகாராசன் 
கீரிமலை தீர்த்தத்தில் நீராடி அதன் பயனாக தன்னைப் பிடித்திருந்த கலியினை 
நீக்கியதாகவும், அருச்சுனன் தீர்த்தயாத்திரை மேற் கொண்ட போது இத்தீர்த்தத்தில்
 நீராடியதாகவும் கூறப்படுகின்றது. புராண இதிகாச இலக்கிய தகவல்கள் கீரிமலை
 நிரூற்றினை பெருமைப்படுத்துவனவாக அமைகின்றன.


இவ்வாறான பெருமைகள் வாய்க்கப்பெற்ற கீரிமலை நீரூற்றில் தீர்த்தமாடினால் தன்னைப் 
பிடித்துள்ள குன்ம நோய் நீங்கும் என்ற எண்ணத்தோடு மருதப்புரவல்லி தன் 
அரசகுலப் பெண்கள் மற்றும் பட்டாளத்தோடு வட இலங்கை புறப்பட்டு வந்து அங்கே
குமாரத்தி பள்ளம் என்னும் இடத்தில் பாளையம் இட்டிருந்தாள். இக்காலப்பகுதியில் 
நகுல முனிவரை சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்று அவரிடம் அவருடைய குன்ம 
நோய் நீங்கிய சமபவத்தினையும் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் கீரிமலை தீர்த்தத்தில் 
நீராடி சிவாலய தரிசனம் தொடர்ச்சியாக செய்து வந்தாள். இவ்வாறான அவளின் புனித 
நீராடல் மற்றும் சிவாலய தரிசனத்தின் பயனாக அவளைப்பிடித்திருந்த கொடிய
 குன்ம நோயும் படிப்படியாக நீங்கி அவளுடைய குதிரை முகம் மாறி அழகு 
குடிவந்தாற்போல் அவளுடைய உடல் யௌவன எழில் கொண்ட அழகிய மங்கை


 எனும்படியாக  மருதப்புரவல்லி எனும் இளவரசி தோன்றினாள். இவ்வாறான 
அழகும் இளமையும் கொண்ட இவளுடைய சொரூபத்தைக்கண்டு ஆச்சரியம்
கொள்ளாதோரே இல்லை எனலாம். 


இக்காலப்பகுதியில் உக்கிரசிங்க மகாராசன் மூன்றாம் தடவையாக கதிர 
மலையிலிருந்து வந்து நகுலேஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்காக வளவர்கோன் பள்ளத்தில்
 பாளையம் போட்டிருந்தான். இதன்போது நகுலேஸ்வரப் பெருமானை தரிசிப்பதற்காக 


ஆலயத்தினுள்ளே சென்றிருந்தான் அதே சமயம் மருதப்புரவல்லியும்
 இறைவனை 
தரிசிப்பதற்காக வந்து இறை தியானத்தில் நின்றிருந்தாள் தியான
 நிலையில் நின்றுகொண்டிருந்த அழகுகள் அனைத்தும் ஒன்றாக குடி கொண்டிருக்கின்ற மங்கையான மருதப்புரவல்லி கட்டிளம் காளையாக அங்கு நின்றுகொண்டிருந்த மன்னவனான 
உக்கிரசிங்கனின் கண்களில் தென்பட்டாள். இறைவனை வழிபடும் நோக்கத்தோடு 
ஆலயத்திற்கு வந்த மன்னன் வந்த நோக்கத்தினை மறந்து மங்கையின் எழில் வடிவில்
 மெய்மறந்து போனான். “பக்தி நிலையில்கூட இவ்வளவு அழகாக தோன்றுகின்ற இவளைப்
 போன்ற ஒரு பெண்ணை நான் இதுவரையில் பார்த்ததில்லையே” என்ற ஆதங்கத்தோடு
உக்கிரசிங்கன் காணப்பட்டான். 


ஆலயத்திலே அழகு பொருந்திய மருதப்புரவல்லியினை கண்ட உக்கிரசிங்க மன்னவனுக்கு 
உள்ளத்திலே மெல்ல மெல்ல காதல் உணர்வு தேன்போல ஊற்றெடுத்தது. 
அவளைத்தவிர வேறு எவரையும் மணப்பதில்லை எனவும் அவள் இல்லாமல் இவ்வுலகில் 
உயிர் வாழ முடியாது என்ற எண்ணமும் அவனுடைய மனதில் ஒரு வைராக்கியத்தை 
ஏற்படுத்தியது. தனது அடுத்த நடவடிக்கை இவளை மணம் புரிவது என்ற நினைப்போடு
 ஆலயத்திலே கயல் விழிகளை மூடி இறை தியானத்தில் மூழ்கிக் கொண்டிருந்த 
அவளின் கண்கள் எப்போது திறக்கும் அவள்பார்வை தன்மீது எப்போது படும்; தன்னைப்பார்த்ததும்
 அவள் மனதில் தன்னைப்பற்றி எவ்வாறான எண்ணம் கொள்வாள்; என்பன போன்ற
 நினைவலைகள் கொண்ட பதைப்புடன் மன்னவன் மருதப்புரவல்லியை வைத்த 
செய்து விட்டு பிரசாதம் வழங்குவதற்காக வந்து கொண்டிருந்தார். இவ்வாறான 
சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்து நின்றான் மன்னன். 


பூசை நிறைவடைந்ததும் தனது இறை தியானத்தை முடித்துவிட்டு தன் கயல் விழிகளை 
திறந்தாள் மருதப்புரவல்லி என்கின்ற அந்த அழகிய இளவரசி. அவள் கண்களை 
திறந்ததும் அவள் முன்னே தன்னை இமை வெட்டாது பார்த்துக் கொண்டிருக்கும்
 உக்கிரசிங்க மன்னன் தென்பட்டான். “இவ்வளவு தீவிரமாக தன்மீது பார்வையினை 
செலுத்துகின்றவன் யார்” என்ற நினைப்புடன் இளவரசியும் உக்கிரசிங்கனை 
உற்றுநோக்கினாள். மன்னவனும் அவளைத் தொடர்ந்து பார்வைக் கணைகளை 
தொடுக்க இளவரசி தலையினை மெதுவாக திருப்பிக்கொண்டு பூசகரிடம்
 பிரசாதத்தினை பெற்றுக்கொண்டு ஆலயத்திலிருந்து திரும்பினாள். இருந்தபோதும்
 தன்னை இமை வெட்டாது பார்த்துக்கொண்டிருந்த அந்த கட்டிளம் காளையை பற்றிய 
எண்ணம் அவள் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அவளின் கணிப்பின்படி அவன் 
நிச்சயமாக ஒரு தேசத்தை ஆளுகின்ற மன்னன் என்று உறுதி கொண்டாள். 
இளவயதினையுடைய மருதப்புரவல்லியின் மனதிலும் காதல் உணர்வு ஊற்றெடுக்க
 ஆரம்பித்தது. மன்னவனின் நினைப்போடு அவள் தன் தங்குமிடத்தை அடைந்தாள்.


ஆலயத்திலே தான் கண்ட அந்த காதல் கன்னியின் நினைப்புடன் சென்ற உக்கிரசிங்க 
மன்னவன் காதல் நோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தான். தான் அவளை 
இக்கணமே மணக்க வேண்டும்; அவள் யார்? அவளுடைய பெற்றோர் யார்? எந்த 
தேசத்தை சேர்ந்தவள்? என்பன போன்ற வினாக்கள் மன்னவனின் மனதிலே சுழன்று 
கொண்டிருந்தது. இவ்வாறான சுழற்சியின் வேகத்தால் தன் அமைச்சரை விசாரித்து
 வரும்படி வேண்டினான். மன்னவன் கட்டளைக்கிணங்க அமைச்சரும் சென்று 
இளமையான மேனியும் அழகிய வதனமும் கொண்;ட அம்மங்கை தொடர்பான சகல 
விடயங்களையும் தெளிவாக அறிந்து வந்தார். தன்மனக்கவலையின் ஒரு பகுதியினை
 போக்குகின்ற தகவல்களை அறிந்து வந்த அமைச்சரைக் கண்ட உக்கிரசிங்க மன்னன் 
பெருமகிழ்ச்சியுடன் வரவேற்று வார்த்தைத்தடுமாற்றத்துடன் தகவல்களை கூறும்படி 
வினவினான். அமைச்சரும் தான் அறிந்து வந்த செய்திகள் அனைத்தையும் 
மன்னனிடம் தெளிவாக கூறினார். சோழ தேசாதிபதியாகிய திசையுக்கிரசோழனின் 
மகள்; என்பதிலிருந்து அவள் குன்ம நோய் நீங்கியது வரையிலான அனைத்து 
செய்திகளையும் அமைச்சர் ஒழுங்குமுறையாக விளக்கினார். எனினும் அவள் குன்ம
 நோயினால் பீடிக்கப்பட்டவள் என்ற செய்தியினை மாத்திரம் அவன் நம்பவில்லை. இருந்த
 போதிலும் குன்ம நோயினை தீர்பதற்காகவே அவள் கீரிமலை வந்தாள் என்ற விடயத்தினை 
அமைச்சர் மன்னவனுக்கு விளக்கினார். இதனைக் கேட்டு வியந்த மன்னன் அவள் இருக்கும்
 இடத்தினை அமைச்சரிடம் வினவினான்.


“குமாரத்திபள்ளம் என்ற இடத்தில்தான் அவர்கள் கூடாரம் அடித்து தங்கியிருக்கின்றார்கள்”
 என்ற செய்தியினைக் கேட்ட மன்னவன் இவள் நினைப்பினால் நாழிகைகளை வருடமாக
 கழிக்கிறேன். அவள் அண்மையில்தான் இருக்கின்றாளா? என்ற வியப்பு;
மகிழ்ச்சி போன்ற உணர்வுகளுடன் எப்படியாவது அவளை அணுகி தன் காதல்
 விருப்புகள் அனைத்தையும் அவளிடம் கூறிவிட வேண்டும் என துடித்தான். “உடனடியாகவே
 நான் அவளை சந்திக்கப்போகின்றேன்” என அமைச்சரிடம் கூற இதனைக் கேட்ட அமைச்சர்
 மன்னனிடம் “அவள் அங்கே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கின்றாள். தாங்கள் தனியே 
சென்று அவளை நெருங்க முடியாது” என்று கூறினார். அதனைக்கேட்ட மன்னன்
 “வாழ்ந்தாள் அவளுடன்தான் இல்லையேல் இவ்வாழ்வு எனக்கு தேவையில்லை என்ற
 உறுதியுடன் இருக்கும் எனக்கு எந்த பாதுகாப்பும் பெரியதொரு விடயமல்ல” 
எனக்கூறினான். மன்னவனின் வேகத்தை தடுக்க முடியாத அமைச்சரும் 
மேலதிகமாக எதுவும் கூறமுடியாதவராக நின்றார். நள்ளிரவு வேளை மருதப்புரவல்லியின்
 கூடாரத்தை அணுகினான் மன்னன் உக்கிரசிங்கன். நள்ளிரவு வேளையாதலால் 
இளவரசி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பபாள் என்றெண்ணி சகல பாதுகாப்புகளையும் தாண்டி
 அரசியாரின் கூடாரத்தை நெருங்கினான் மன்னன் உக்கிரசிங்கன்.


நகுலேஸ்வரர் சந்நிதியிலே கட்டிளம் காளையென தோற்றமளித்த உக்கிரசிங்கனைக்
 கண்ட மருதப்புரவல்லி அதன் காரணமாக அவன்மீது காதல் கொண்டு மன்னவன்
 நினைப்ப மனதை வாட்ட உணவு உறக்கம் இல்லாது அதே நினைப்புடன் வருந்திய
 நிலையில்; நள்ளிரவாகியும் உறக்கம் இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
 மன்னவன் அவளை அணுகியதும் தான் இதுவரையும் யாரை நினைத்து
 மனவாட்டத்துடன் காணப்பட்டாளோ அவனே தன் கண்முன் நிற்பதை அறிந்து 
கலக்கமுற்று கனவா? அல்லது நினைவா? என திகைத்தான். இளவரசியாரின் 
கூடாரத்திற்குள் வைத்து ஏதாவது பேசினால் காவலர்கள் உசாராகலாம் என்ற 
காரணத்தினால் அவளை அப்படியே பஞ்சணையோடு தூக்கிகொண்டு தன் 
கூடாரத்தை நோக்கி விரைந்தான் மன்னவன்.


மறுநாள் பொழுது விடிந்ததும் மருதப்புரவல்லி கண்களை திறந்தாள் அவள் 
இருப்பது மன்னவன் உக்கிரசிங்கனின் கூடாரம். அருகே உக்கிரசிங்கன் உறங்கவது போல்
 பாசாங்கு செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் தான் நள்ளிரவில் உணர்ச்சிவசப்பட்டு
 மன்னவனுடன் வந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. உடனே அவள் மன்னவனை நோக்கி
 தன்நிலையினை வினவ மன்னவன் “நான் கதிரமலையை தலைநகராக கொண்டு 
இலங்கையின் ஒரு பகுதியினை ஆட்சி  செய்கின்ற உக்கிரசிங்கன் எனவும் நகுலேஸ்வரர்
 சந்நிதியிலே உன்னைக் கண்டதும் உன்மீது காதல் வயப்பட்டு உன்னை அடைவதை
 இலக்காக கொண்டு சில தினங்களாக உறக்கமில்லாமல் வருத்தமுற்று உன் நினைவில் 
ஏங்கியிருந்தேன்” என கூறினான். அத்தோடு “நீ இல்லாமல் என் தனிமை என்னை
 கொல்கின்றது. இப்பொழுதே நீ என்னுடன் வா நாம் கதிரமலைக்கு சென்று நம்
 திருமணத்தினை நடாத்துவோம்” என்று கூறினான். 


ஆனால் மருதப்புரவல்லி “நான் குன்ம நோய் நீங்கியதன் காரணமாக
 முருகப்பொருமானிற்கு மாவிட்டபுரத்திலே ஆலயம் எடுப்பதாக தீர்மானித்துள்ளேன்
 அதனால் எனது இந்த ஆலயம் எடுக்கும் பணிகள் யாவும் நிறைவ பெற்ற 
பின்னர்தான் தான் இவ்விடத்தை விட்டு வருவேன்” என மன்னவனிடம் கூறினாள்.
 “அவ்வாறாயின் உனக்கு துணையாக இருந்து நானும் ஆலயம் அமைக்கும் 
பணியினை பூரணமாக நிறைவேற்றுவதற்கு அருகில் இருந்து பல உதவிகளை
செய்கின்றேன்”என்று மன்னன் உக்கிரசிங்கன் இளவரசியிடம் கூறினான். 


இவ்வேளையில் மருதப்புரவல்லியின் கூடாரத்திலிருந்தவர்கள் இளவரசியை
 காணவில்லை  என பரிதவித்த நிலையில் தேடியலைந்தனர். பின்னர் உக்கிரசிங்க
 மகாராசாவின் கூடாரத்திற்குள் நுழைந்தபோது அங்கு சோழ இளவரசி இருப்பதனைக் 
கண்டு திகைத்துப் போயினர். இவ்வாறு திகைத்துப்போன இளவரசியின் தோழிமார்
 மன்னவனை நோக்கி “இளவரசியாரைக் காணவில்லை என்ற காரணத்தினால் 
அச்சமடைந்து பல இடங்களிலும் தேடியலைந்து இங்கு வந்திருக்கின்றோம். இந்நிலையில் 
நாங்கள் எமது சோழ அரசுக்கு என்ன பதில் கூறுவது என்று தடுமாறி நிற்கின்றோம்” 
என கூறினர். இதனைக் கேட்ட மன்னவன் பயந்து நடுங்கிப்போய் நின்ற தோழிப் 
பெண்களை நோக்கி “உங்கள் இளவரசியார் கதிரமலை அரசனான என்னை மணந்து
 கொள்ளப் போகின்றாள். நாங்கள் இருவரும் இதல் பூரணசம்மதத்துடன் இருக்கின்றோம்
 என்ற செய்தியினை உங்களுடைய அரசருக்கு உடனடியாக அனுப்புங்கள்” என்று கூறினான். இதனைக்கேட்ட தோழிப் பெண்கள் மருதப்புரவல்லியினை நோக்க அவளும்
 சைகையினால் தன் சம்மதத்தினை தெரிவித்தாள். 


இதன் பின் மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கும் பணி 
ஆரம்பிக்கப்பட்டது. இதன் பொருட்டு தான் குன்மநோய் நீங்கியதன் காரணமாக 
மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்போகின்ற
 செய்தியினையும் மருதப்புரவல்லி தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைத்தாள்.
 தன் மகளின் விருப்பத்திற்கிணங்க சோழதேசாதிபதியான திசையுக்கிர சோழன் தன் நாட்டிலே


 இருக்கின்ற சிறந்த சிற்பிகளையும் பெரும் தொகையான பொளையும் அனுப்பி
 வைத்தான். இச்சம்பவங்களின் விளைவாக மாவிட்டபுரத்திலே முருகப்பெருமானுக்கு
 அழகிய அம்சங்களைக் கொண்ட ஆலயம் எழுந்தது. மருதப்புரவல்லியினால் மாவிட்ட
புரத்திலே எழுந்த ஆலயத்திலே எழுந்தருளச் செய்வதற்காக திருவுருவத்தினை 
அனுப்பிவைக்குமாறு இளவரசி தன் தந்தைக்கு தகவல் அனுப்பினாள். இதன்படி
 காசாத்துறையிலே காங்கேயன் திருவுருவம் வந்திறங்கியது. காங்கேயன் திருவுருவம் 
வந்திறங்கியதால் காசாத்துறை என்கின்ற இடம் காங்கேயன் துறை என்ற பெயர் பெற்றது. 


இவ்வாறு கொண்டுவரப்பட்ட காங்கேயன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டு
 ஆனி உத்தர தினத்தன்று துவசாரோகணம் தொடங்கி பெருவிழாவினை 
நிறைவேற்றினாள் மருதப்புரவல்லி. இதன் பின்னர் மாவிட்டபுரத்திலே ஆலயம் 
அமைப்பதாக கொண்ட நோக்கு தங்கு தடையின்றி செவ்வனே நிறைவேறியமையினால்
 உக்கிரசிங்கன் பெரு மகிழ்ச்சியுடன் கதிரமலை சென்று சோழ இளவரசியான 
மருதப்புரவல்லியினை மணம் முடித்தான். இந்நிலையில் தன் துணைவியான 
மருதப்புரவ்லிலியினால் அமைக்கப்பட்ட ஆலயம் மாவிட்டபுரத்திலே 
இருந்தமையினாலும்; சிவவழிபாட்டிற்குரியதாக கதிரமலை இருக்காமையினாலும்; 
உக்கிரசிங்கன் தான் நீண்ட காலமாக தலைநகராக கொண்டு அரசாண்டு வந்த 
கதிரமலையை விடுத்துஇ இயற்கை அழகு மிக்கதும்; கலிங்கர் வாழ்ந்து கொண்டிருந்ததுமான
 சிங்கை நகரினை தன் இராசதானியாக கொண்டு மருதப்புரவல்லியுடன் ஆட்சியினை நடாத்தி
 வந்தான். 


இவ்வாறு உக்கிரசிங்கன் சிங்கை நகரினை தலைநகராக கொண்டு ஆட்சியை நடாத்தி 
சகல செல்வ சௌபாக்கியங்களையும் அனுபவித்துவரும் காலத்தில் 
உக்கிரசிங்கனுக்கும் மருதப்பிரவல்லிக்கும் அவர்களுடைய இல்லறவாழ்வின் இன்பமான
 தன்மைக்கு எடுத்துக்காட்டாக வாலசிங்கன் என்னும் ஆண்குழந்தையும்
சண்பகவதி எனும் பெண்குழந்தையும் கிடைத்தது. பாலசிங்கனுக்கு நரசிங்கராசன்
 என்கின்றதொரு பெயரும் வழங்கப்பட்டது. 


உக்கிரசிங்கன் தனக்குப் பின்னர் ஆட்சிபீடமேற வேண்டியவானாக வாலசிங்கன் 
இருக்கின்றமையால் அவனுக்கு பலவிதமான கற்கை நெறிகள் அவசியம் என 
எண்ணினான். கால ஓட்டத்திற்கேற்ப வாலசிங்கனின் வளர்ச்சியும் உயர்ந்து
 கொண்டிருந்தது. சிங்கை நகரினைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்யப்போகின்ற 
அடுத்த மன்னனின் உருவாக்கம் தொடங்கியது. வாலசிங்கன் கலைகள் உட்பட்ட அனைத்து விடயங்களையும் கற்று தேர்ச்சி பெற்றதோடு தேர்ச்சி பெற்ற ஆசான்களிடம் போர் 
வித்தைகளையும் திறமையான முறையில் கற்று தேர்ந்தான்.


உக்கிரசிங்கன் தனக்குப்பின் தன் தேசத்தினை ஆள வேண்டிய மன்னவன் எவ்வாறான 
திறமைகளை எல்லாம் கொண்டிருக்க வேண்டும் என எண்ணினானோ அவ்வாறான
 அனைத்து விடயங்களும் உரிய திறைமையான ஆசான்களைக் கொண்டு கற்பித்தான். தன் 
தேசத்திற்குரி மன்னவன் தயார்படுத்தப்படுவதையிட்டு உக்கிரசிங்கன் பெரு மகிழ்ச்சியினை 
அடைந்தான். தந்தையார் விருப்பத்தினையும் நிறைவு செய்யும் பொருட்டு வாலசிங்கன்
 சிறந்த முறையிலே தன் கற்கைகளை மேற்கொண்டு வந்தான். உக்கிரசிங்கனின் 
பரம்பரையிலே தோன்றிய மன்னர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்புகளை தன்னிடத்தே
 வாலசிங்கன் வளர்த்துக் கொண்டான். தன் நாட்டையும் மக்களையும் எவ்வாறு பாதுகாக்க
 வேண்டும் என்பதனை தந்தையிடம் பாடம் கற்றுக் கொண்டான் வாலசிங்கன். 


வனத்திலே ஆச்சிரமங்களில் வாழ்ந்த முனிவர்களிடம் சென்று அவர்களுக்கு ஏவல் செய்து 
அவர்களிடம் பல நற்பண்புகளையும் சிறந்த ஞானத்தையும் பெற்றுக்கொண்டான். 
வாலசிங்கனின் பணிவு அடக்கம் என்பனவற்றின் பயனாக முனிவர்கள் அவனிடம் அதிக 
அன்பு கொண்டவர்களாக காணப்பட்டனர். முனிவர்கள் அவன் மீது கொண்ட அன்பின் விளைவாக 
அவனுக்கு பல அபூர்வ சக்திகளை கொண்ட பயிற்சிகளையும் வழங்கினார்கள். அதன் மூலமாக
 வாலசிங்கன் பல சிறப்பான இயல்பகளை தன்னகத்தே கொண்டவனாக காணப்பட்டான். 
முனிவர்களிடம் ஞான உபதேசம் பெற்றவனாகையால் வாலசிங்கன் சிறந்த ஒழுக்க
சீலனாக காணப்பட்டான். வாலசிங்கனின் பலதரப்பட்ட வளர்ச்சியினைக்
 கண்ட உக்கிரசிங்கன் சிறந்த ஒரு மன்னனிடம் மக்களையும் நாட்டையும் 
ஒப்படைக்கப் போகின்றேன் என்ற திருப்தியினால் மனம் மகிழ்ந்தான். 


வாலசிங்கனின் வளர்ச்சியினால் நாட்டு மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். சிறப்பான ஒரு மன்னனின் ஆட்சியானது நிறைவடையப்போகின்ற தருணத்தில் இன்னுமொரு சிறந்த பண்புகளையுடைய மன்னனின் உதயம் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 


பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி இதிலிருந்து எவரும் மீள முடியாது என்பது
 உண்மை. வாலசிங்கன் தூணைப்போன்ற வலிமையுடையவனாக 
வளர்ச்சியடைந்து ஒரு மன்னவனுக்குரிய சகல இலக்கணங்களையும் பெற்றவனாக 
விளங்கினான். இவ்வேளையில் உக்கிரசிங்கன் முதுமையி;ன் கோரப்பிடியில் 
சிக்குண்டவனாய் அதிலிருந்து தப்ப முடியாத நிலையில் சிறந்ததொரு மன்னனாக தன்
 புத்திரனை உருவாக்கியதோடு அவனால் தன் தேசத்திற்கு சிறந்த ஒரு செங்கோல் ஆட்சி 
வழங்கப்படும் என்ற உறுதியோடும் உயிர் நீத்தான்.


உக்கிரசிங்கனின் மறைவு தேசத்து மக்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தியது. 
உக்கிரசிங்கனின் மரணத்தினால் சிங்கை நகரம் இருள் சூழ்ந்தது போல் காட்சியளித்தது. 
எனினும் சூழ்ந்த இருள் நீங்கி மீண்டும் புதிய ஒரு காலைப் பொழுது விடிந்தது போல் 
வாலசிங்கனின் ஆட்சி தொடங்கியது. இருள் சூழ்ந்த வானத்திலே அதிகாலை நேரத்தில்
பேரொளியுடன் உதிக்கின்ற சூரியனைப் போல் வாலசிங்கன் மக்கள் மத்தியில் 
தோன்றினான். தந்தைக்குப்பின் தனயன் என்பதற்கிணங்க வாலசிங்கன் ஜெயதுங்கபரராசசிங்கன்


 என்ற பட்;டத்துடன் சிங்கை நகர் அரியணையில் அமர்ந்தான். 


பல்வேறு சிறப்புக்கள் வாய்க்கப்பெற்றவனான வாலசிங்கன் உக்கிரசிங்கனின் இறப்பின் பின்னர்
 அவனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டு செங்கோல் ஆட்சியினை 
ஆரம்பித்தான். இவ்வாறு தொடர்ந்த வாலசிங்கனின் ஆட்சியிலே மக்கள் செல்வச்
 செழிப்புடனும் அச்சமின்றியும் அமைதியான சூழ்நிலையிலையிலே வாழக்கூடியதாக இருந்தது. வாலசிங்கன் இறைபக்தியில் சிறந்தவனாக விளங்கியதனால் சமய வழிபாடுகள் சிறப்புற்று
 காணப்பட்டன. தந்தை உக்கிரசிங்கன் விட்டுச் சென்ற பணிகளையும் தொடர்சியாக செய்தான் வாலசிங்கன். இவன் சிறந்த கலைஞனாக விளங்கியமையினால் கலைக்கூடங்கள் பல 
நிறுவப்பட்டன. இதன் மூலம் நாட்டில் கலை வளர்ச்சி ஏற்பட்டது. கஞைர்களும்
புலவர்களும் பாராட்டப்பட்டனர். பட்டம் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மக்கள் 
சமுதாயத்தில் அனைத்துப் பகுதியினரையும் திருப்திப்படுத்தக்கூடியதான ஒரு ஆட்சியினை
 வாலசிங்கன் ஏற்படுத்தினான். கொடை வள்ளலான இவனுடைய ஆட்சியில் மக்கள்
 நிம்மதியான வாழ்க்கையினை வாழ்தனர். 

சோழ இளவரசி சீர்பாததேவியின் வருகை

நீதி தவறாது செங்கோல் ஆட்சியினை நடாத்துகின்ற மன்னர்களே மக்கள் மனங்களிலும் வரலாற்றிலும் பண்பாளர்களாக வர்ணிக்கப்படுகின்றனர். இவ்வாறான எத்தனையோ மன்னர்களிடையே வாலசிங்கனின் ஆட்சியும் முக்கியமானதொரு ஆட்சியாக காணப்பட்டது. மக்கள் அவனுக்கு கடவுளுக்கு அடுத்தபடியான இடத்தினை வழங்கினார்கள். மேலும் வாலசிங்க மன்னன் மக்களை மதிப்பவனாகவும் மக்கள் குறைளை நாளாந்தம் தீர்ப்பவனாகவும் மக்கள் நலன்களில் அதிக அக்கறை கொண்டவனாகவும் தன்னுடைய ஆட்சியினை மேற்கொண்டான். உக்கிரசிங்க மன்னன் இல்லாத குறையினை தீர்க்கின்ற ஒருவனாக வாலசிங்கன் சிங்கை நாட்டு மக்கள் மத்தியில் விளங்கினான். சிங்கவாகுவின் மைந்தனான விஜயனின் பரம்பரையில் வந்தவனாகையால் வீரத்திலும் சிறந்தவனாகவே வாலசிங்கன் காணப்பட்டான். சிறந்த நிர்மாணப்பணிகளையும் தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொண்டவனாகையால் அவன் புகழ் என்றும் நிலைக்கக்கூடியதாக இருந்தது.


இவ்வாறாக தமிழ் மணமும் செல்வச் செழிப்பும் நிறைந்த வாலசிங்கனின் அரண்மனைக்கு சோழ நாட்டினை சேர்ந்த இரண்டு கண்களும் குருடான “கவிவீரராகவன்” என்னும் யாழ்பாடி என அழைக்கப்படுகின்ற பாணன் ஒருவன் வருகை தந்தான். அக்காலத்திலே சிறப்பு தேர்ச்சியினை பெற்ற கலைஞர்கள் தங்களின் கலை ஊடாக மன்னர்களை புகழ்ந்து கொள்வது வழக்கமாயிருந்தது. அந்த வகையில் வந்த பாணனும் சிங்கை அரசன் வாலசிங்கன் பெயரில் பிரபந்தம் பாடியவாறு யாழ் வாசித்துக் காட்டினான். இவ்வாறாக யாழ் மூலமான வாழ்த்தினை கேட்டு பூரித்துப்போன வாலசிங்கன் யாழ்பாடியின் கலையின் சிறப்பினையும் பாராட்டத்தறவில்லை என்று கூறலாம்.


பட்டம் பரிசில்கள் வழங்குவதில் பெயர் போன வாலசிங்கன் யாழ்பாடியின் திறமைக்கு பரிசாக ஏதாவது வழங்க வேண்டும் என நினைத்து இலங்கையின் வடதிசையிலே உள்ள மணல்திடல் என்னும் இடத்தினை பரிசாக வழங்கினான். அன்று வாலசிங்கன் பரிசாக வழங்கிய அந்த மணல்த்திடல் என்னும் இடம் அந்த யாழ்பாடியின் பெயரால் இன்று “யாழ்ப்பாணம்” என அழைக்கப்படுகின்றது. இந்த யாழ்ப்பாணம் இலங்கையில் மிகவும் முக்கியமானதொரு நிலையமாக விளங்கியது. மணல்த்திடலிலே யாழ்பாடி தன் இனத்தவர்களில் ஒரு பகுதியினரை அழைத்துவந்து குடியமர்த்தினான். மணல்த்திடல் என்னும் பகுதியினை பரிசாக பெற்ற பாணன் சோழ நாட்டு வணிகன் ஒருவன் கொடுத்த பரிசுப் பொருட்களுடன் தமது இளவரசியின் ஓவியம் ஒன்றினையும் கொடுத்து சென்றான். 


பாணன் கொடுத்துச்சென்ற இளவரசியின் ஓவியம் வாலசிங்கனின் வாழ்க்கையில் பாரியதொரு மாற்றத்தினையும் திருப்பத்தினையும் ஏற்படுத்துமென்று எவரும் நினைத்திருக்கமாட்டார்கள். வாலசிங்க மன்னவனின் வாழ்க்கையிலே வசந்தம் பூத்துக் குலுங்குகின்ற காலம் நெருங்கிக் கொண்டிருந்த இவ்வேளையில் இளவரசியின் படம் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தாற்போல் இருந்தது. ஒவ்வொரு ஆண் மகனுடைய வாழ்க்கையிலும் ஒரு காலப்பகுதியில் காதல் உணர்வானது மேலோங்கி நிற்கும். வானத்து நிலவினை தன் காதலியாக பாவனை செய்கின்ற இந்த இளம் பருவம் ஒவ்வொரு ஆண்மகனுடைய வாழ்விலும் மறக்க முடியாத பருவமாகும். படிக்காத பாமர வாலிபன் கூட இலக்கிய நயம் மிக்க கவிதைகளை வடிக்கின்ற அந்த இளமைப் பருவத்தினை எய்திய வாலசிங்க மன்னவனின் மனதிலே முழுமையாக நிறைந்தாள் அந்த சோழ இளவரசி. சோழ இளவரசியினை நேரில் காணாத வாலசிங்கன் அந்த பாணன் வழங்கிய ஓவியத்தினை வைத்து கொண்டு கனவிலே இளவரசியுடன் காதல் உணர்வுகளை பரிமாறிக் கொண்டான்.


எத்தனையோ பலம் பொருந்திய படைப்பலங்களையும் எதிர்ப்படை வீரர்களையும் பயங்கரமான எவ்வளவோ ஆயதங்களையும் எதிர்த்து நின்று விரட்டுகின்ற மாவீரனான வாலசிங்கன்; மன்மதனின் பாணங்களின் கொடுமை தாங்காதவனாய் காதல் நோயினால் பீடிக்கப்பட்டான். தன் அரச கடமைகளை ஒழுங்குமுறையாக நிறைவேற்ற முடியாதவனாக வாலசிங்கன் காணப்பட்டான். அரச சபையிலே எத்தனையோ வைத்தியர்கள் இருந்தபோதும் அவர்கள் எவராலும் வாலசிங்கனின் நோயினை தீர்க்கமுடியவில்லை. “மன்னவனுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான மருந்து சோழ நாட்டிலே உள்ளது” என்பதனை மன்னவனின் அமைச்சர் உணர்ந்து கொண்டார். எவ்வாறாயினும் அம்மருந்தினைக் கொண்டு மன்னவனின் நோயினை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தொடங்கினார். 


மன்னவனின் இளமை நோயினை திர்;ப்பதற்கான அந்த இளவரசியின் பூர்வீகம் என்ன அவள் எங்கு இருக்கின்றாள் எந்த அரசனின் மகள் அவள் எந்த பரம்பரையினைச் சேர்ந்தவள். என்பன போன்ற விடயங்களை சேகரிக்கும் முயற்சியில் வாலசிங்கனின் தலைமை அமைச்சர் ஈடுபட்டார். இவ்வாறான நிலையில் வாலசிங்கன் மனதுள் புகுந்து கொண்டுள்ள அந்த இளவரசி பற்றிய தகவல்கள் நாளாந்தம் அரண்மனைக்கு வந்தவண்ணம் இருந்தன. 


மன்னவனின் மனதிலே புகுந்து ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த அழகியான அவள் யார் என நோக்கின்;  இன்றும் அழயாப்புகளுடன் விளங்குகின்ற சோழ மன்னர்களது வரலாற்றிலே கி.பி.300 தொடக்கம் 800 வரையான நூற்றாண்டு காலப்பகுதி இருண்ட காலமாக வர்ணிக்கப்படுகின்றது. இக்காலப்பகுதியில் சோழ மன்னர்கள் சிற்றரசர்களாகவே காணப்பட்டனர். இவ்வாறான காலப்பகுதியில் சோழ மன்னர்கள் சிற்றரசர்களாக உறையூர்இ பழையாறைஇ திருவாரூர் என்னும் நகரங்களில் இருந்து கொண்டு செங்கோல் ஆட்சி செலுத்தியமை வரலாற்றில் காணக்கூடிய உண்மை. சோழர்களை பொறுத்தவரையில் பழையாறை நகரம் முக்கியமான நகரமாக காணப்பட்டது. இந்த பழையாறை நகர அரசாட்சி வரலாற்றில் சோழ மன்னனான குமாராங்குசன் கி.பி. 831ம் ஆண்டு அரசாட்சி பொறுப்பினை ஏற்று ஆட்சி செய்யத் தொடங்கினான்.  இவன் நந்திவர்ம பல்லவனின் ஆணையின் கீழ் வரி செலுத்துகின்ற சிற்றரசனாக செங்கோல் ஆட்சி செலுத்தினான். 


சோழ மன்னர்களின் வரலாற்றினை எடுத்து நோக்குகின்றவிடத்து இந்து மத வரலாற்றில் சிறந்த ஆட்சியினை வழங்கிய மன்னர்களாக காணப்பட்டனர். தஞ்சைப் பெருங்கோயிலை கட்டுவித்த இராஜராஜ சோழன்இ கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டுவித்த இராஜேந்திர சோழன் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். இக்கால கோயில்கள் ஒரு சமூக நிறுவனங்களாக விளங்கியமையும் அவை மருத்துவ நிலையம் போன்றனவாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றமையினையும் வரலாற்றில் காணலாம். இப்பின்னணியின் உருவாக்கத்தில் சோழ சாம்ராச்சியத்தை கட்டமைப்பதில் விஜயாலய சோழன்இ சுந்தரச் சோழன்இ கரிகால் பெருவளத்தான் போன்றோரின் அரசியற் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன. 


இலங்கையை சோழர்கள் கைப்பற்றி பொலநறுவையை தளமாக கொண்டு ஆண்ட போது ஈழத்தில் சைவம் வளர்ச்சியடைந்தமைக்கு பொலநறுவைச் சிவன் கோயிலும் அது சார்ந்த புறச்சான்றுகளும் இன்றும் நம்மால் பார்க்கக்கூடிதாக உள்ளது. தவிர சிங்கள நாட்டார் பாடல்களிலும் சேழர்களுடைய அரசியற் குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளமையும் தெரியவருகின்றது. இவ்வாறான சோழ மன்னர்களின் சிறப்புக்கள் வரலாற்று உண்மையாக உள்ளன. 


இவற்றினை வைத்துப் பார்க்கின்றவிடத்து ஆரம்ப காலத்தில் சிற்றரசர்களாக வாழ்ந்த சோழ மன்னர்கள் தங்களின் ஆட்சிப்பலத்திற்கு ஏற்ப தம்மால் இயன்ற செயற்பாடுகளை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த வகையில் குமாராங்குச சோழ மன்னனும் சோழ மன்னர்களின் சிறப்பியல்புகளில் இருந்து விலகாதவனாய் காணப்பட்டான். இவன் சிறந்த பண்பாளனாகவும் வீரம் செறிந்தவனாகவும் கலையில் கூடிய ஈடுபாடு கொண்டவனாகவும் பக்தி வழிபாடு என்பனவற்றில் முன்னோடியான ஒருவனாகவும்; விளங்கினான்.


இத்தகைய சிறப்புக்கள் வாய்ககப்பெற்ற குமாராங்குசனின் மகளான சீர்பாததேவியின் ஓவியத்தினை பாணன் வாலசிங்க மன்னனுக்கு பரிசாக வழங்கிச் சென்றிருந்தான். வாலசிங்க மன்னவனுடைய உள்ளத்திலே நிரந்தரமாக கூடுகட்டி குடிபுகுந்த அந்த அழகி இளவரசி சீர்பாததேவிதான் என்ற உண்மையினை வாலசிங்கனின் தலைமை அமைச்சர் வாலசிங்கனுக்கு எடுத்துக் கூறினார். இவ்வாறான செய்தி வாலசிங்க மன்னவனுடைய காதிலே தேன் போல பாய்ந்தது. இந்த நிலையிலே வாலசிங்கன் சீர்பாததேவியின் பின்னணியின் பலம் என்ன அவள் பரம்பரை என்ன என்பன போன்ற விடயங்களை அறிந்தும் அவளை தன் துணைவியாக ஆக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் தன் வாலிப நோய்க்கு மருந்து கிடைத்துவிட்டதென்ற மகிழ்ச்சியுடனும் சீர்பாததேவியினை மணப்பதற்கான காரியங்களை துரிதப்படுத்தினான். 


கொடையில் கர்ணனை ஒத்த குமாராங்குசனுக்கு விஜயாலயன் சீர்பாததேவி என இரு பிள்ளைகள்இ அரண்மனையிலே அரசிளம் குமரியாக வாழ்ந்த சீர்பாததேவி அழகிலும் அரசியாகவே காணப்பட்டாள். பார்க்கின்ற இளவயது ஆடவர்களின் உள்ளத்தினை கலங்க வைக்கின்ற விழிகளும் பொன்நிற மேனியும் நீண்ட கூந்தலும் அவளின் அழகினை பொலிவடையச் செய்தன. இத்தனை அழகும் ஒன்று சேர்ந்து வாலசிங்கனை வாட்டியதுஇ அந்த மன்மதனின் செயல். திருமண வயதை அடைந்த சீர்பாததேவிக்கு உரிய வீரனைஇ கட்டிளம் காளையை மாப்பிள்ளையாக ஏற்க பழையாறை அரண்மனை காத்துக்கிடந்தது. இவ்வாறான காத்திருப்புக்கு பலனாக வாலசிங்க மன்னவனின் தலைமை அமைச்சர் பழையாறை அரண்மனைக்கு மன்னவனின் பரிசுப் பொருட்களுடன் பிரவேசித்தார்.


சிங்கை மன்னவனின் தலைமை அமைச்சரை அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்ற குமாராங்குசன் முதலில் அமைச்சரின் வருகைக்கான காரணத்தினை அறிந்திருக்கவில்லை. எனினும் அமச்சரை அன்புடன் வரவேற்று அவருக்குரிய மரியாதைகளையும் ஒழுங்கு முறைப்படி வழங்கினான். அதற்கேற்ப அமைச்சரும் மன்னவன் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களையும் குமாராங்குசனிடம் கையளித்து தான் வந்த நோக்கத்தினை விவரிக்கலானான். 


சிங்கை மன்னவன் வாலசிங்கனுக்கு தன்மகள் சீர்பாததேவியை திருமணம் பேசுவதற்காகவே அமைச்சர் இங்கு வந்திருக்கின்றார்; என்பதனை அமைச்சரூடாக அறிந்தான் மன்னன். பல்லவ மன்னவனின் ஆட்சியின் கீழே சிற்றரசனாக ஆட்சிபுரிந்து வருகின்ற குமாராங்குசச் சோழன் தன் மகளை சிங்கை மன்னவனுக்கு மணம் முடித்து வைக்க எந்தவிதமான தயக்கமும் இன்றி தன் பூரண சம்மதத்தினை தெரிவித்தான். இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த அமைச்சர் திருமணத்திற்கான முகூர்த்த நாளினை சோழ மன்னனின் பழையாறை அரண்மனையை சேர்ந்த அந்தணர்களின் ஆலோசனைப்படி தீர்மானித்ததும் பெருமகிழ்ச்சியுடன் சிங்கை நகர் அரண்மனைக்கு விரைந்தார். 


அமைச்சர் கொண்டு வந்த இனிப்பான செய்தி வாலசிங்கனின் மனதில் இன்ப ஊற்றாக பாய்ந்தது. மனதிலே கற்பனையிலே உறவாடியவன் இன்னும் சில நாட்களில் கனவுக் கன்னியுடன் நிஜமாகவே உறவாடுவதையெண்ணி சந்தோச வெளியில் சிறகடித்துப் பறந்தான். தன் அரண்மனை காவலர்களையெல்லாம் தன் திருமணவேலைகளில் ஈடுபடுத்துமாறு பணித்தான். வாலசிங்கன் சோழ இளவரசியை திருமணம் செய்யப்போகின்றான் என்ற செய்தி சிங்கை நகரமெங்கும் விரைவாக பரவியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்கள். தம் நாட்டு மன்னவன் முடிசூட்டு விழாவின் பொருட்டு சிங்கை நகர் விழாக்கோலம் பூண்டிருந்தது.


சிங்கை நகரமே இவ்வாறு குதுகலிக்கின்ற வேளையில் திருமணம் நடைபெறவிருக்கின்ற பழையாறை நகரமும் நகரமக்களும் ஆனந்த தாண்டவமாடினர். பழையாறையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம் பெற்றன. திருமண செயற்பாடுகளில் அரண்மனை ஏவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். சோழ மன்னர்களின் சிற்றரசர் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்த விஜயாலயன் தங்கையின் திருமணம் என்றால் கேட்கவும் வேண்டுமா? மிகவும் கோலாகலமான முறையில் ஏற்பாடுகள் இடம் பெற்றன.
பழையாறை அரண்மனையிலே வாலசிங்கன் சீர்பாததேவி திருமணம் மக்கள் கூட்டம் திரண்டிருக்க சோழ அரசின் முக்கிய பிரமுகர்கள்இ சிங்கை அரசின் முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் விண்ணுலக தேவர்கள் கூடி வியக்கும் அளவிற்கு வெகு விமர்சையாக இடம் பெற்றது. இறைவனின் திருவருளினால் அந்த இளம் மணமக்களின் திருமணம் நிறைவு பெற்றது. அனைவரும் மணமக்களை வாயாரவும் மனதாரவும் வாழ்த்தினார்கள். வாழ்த்துக்களுக்கு மத்தியில் வாலசிங்கனும் சீர்பாததேவியும் தங்களின் இல்லற வாழ்க்கையினை இன்பமாக ஆரம்பித்தார்கள்.


வீரர்முனையில் விநாயகருக்கு ஆலயம்

சீர்பாததேவியின் தேசமான சோழ நாட்டிலே சீர்பாததேவி வாலசிங்கன் திருமணம் இடம்பெற்று சில நாட்கள் அவர்கள் இன்பமாக கழித்த போதிலும் அவர்கள் தங்களின் திருமண வாழ்க்கையினை முழுமையாக அங்கு கழிக்க முடியாது; கணவன் வீட்டில் மனைவி சென்று வாழவேண்டிய தமிழர் பண்பாடும், சிங்கை நாட்டு மன்னவன் என்ற பொறுப்பில் வாலசிங்கன் இருப்தினாலும் அவர்கள் இருவரும் சிங்கை அரண்மனைக்கு திரும்புவது அவசியமான ஒன்றாக காணப்பட்டது. எனினும் தன் மகளை அன்புடனும் பாசத்துடனும் வளர்த்த குமாராங்குசனுக்கு தன் மகள் இன்னுமொரு நாட்டிற்கு மருமகளாக செல்வதென்பது அவனுக்கு பெருத்த மனவேதனையை கொடுத்தது. எனினும் பெண் பிள்ளை என்று பெற்றுவிட்டால் அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்புவது என்பது பாமர மக்கள் முதல் பாராளும் மன்னன் வரை வழக்கமான விடயமாகக் காணப்பட்டது. இருந்த போதிலும் தன் மகளை இன்னுமொரு நாட்டு மன்னனுக்கு மனைவியாக்கி அனுப்புவதென்ற  திருப்தியுடன் மனவேதனையை மூடி மறைத்தவனாய் குமராங்குசன் தன் மகளையும் மருமகனையும் சிங்கை நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டான்.

தன்னை பெற்றெடுத்து ஆசையாய் வளர்த்த பாசமிக்க பெற்றோரினை விட்டுப் பிரிந்து செல்வது சீர்பாததேவிக்கும் பெருத்த வேதனையாக இருந்த போதிலும் தன் மனதிற்கு பிடித்த கட்டிளம் காளையை திருமணம் செய்த மகிழ்ச்சியினால் தன் கவலைகளையெல்லாம் மறந்தவளாய் வாலசிங்கனுடன் சிங்கை நகர் செல்வதற்கு சீர்பாததேவியும் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொண்டாள். என்னதான் அரசிளம் குமாரியாக இருந்தாலும் அவளும் பெண்தானே! இத்தனை வருடம் தன் தாய் நாட்டிலே வாழ்ந்தாலும் இனி ஒரு புதிய தேசத்தில் புதிய சுற்றத்தாருடன் வாழ்வதென்பது சீர்பாததேவிக்கு மனக்கலக்கத்தினை ஏற்படுத்தியது. 

தன்மகளின் மனக்கலக்கத்தினை உளமார அறிந்து கொண்ட குமாராங்குசன் தன்மகளின் கவலையினை தீர்க்கும் நோக்குடன் தன் அரச குலத்தவர்களில் சிலரை தன்மகளுடன் சிங்கை நகர் அனுப்புவதற்கு முடிவு செய்தான். இதன்படி சோழ நாட்டிலே திருவாரூர், பெருந்துறை, பழையாறை, கட்டுமாவடி முதலான இடங்களில் வாழ்ந்த அரசகுலத்தவர், அந்தணர்கள், வேளாளர், வணிகர் என்னும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களையும் தன்மகளுடன் துணையாக அனுப்ப முடிவு செய்தான். இதன் பிரகாரம் சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, வெள்ளாயி, நரையாகி, முழவன் போன்ற ஏழு அரசகுலத்தவர்களையும் சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார், முதலிய அந்தணர்கள், கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்க செட்டி, சதாசிவச் செட்டி, சங்கரச்செட்டி போன்ற செட்டிமார்கள் போன்றோர் தங்களின் மனைவிமாருடன் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டனர். இவர்களும் மன்னவனின் கட்டளைக்கிணங்க சீர்பாததேவி என்னும் இளவரசிக்கு துணையாக சிங்கை நாடு செல்ல பூரண மனதுடன் தயாராகினர். 

கப்பலிலே கடல்வழியாக சிங்கை நாட்டுக்கு பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த வேளையில் தன் அன்பு மகளுக்கு சீர்பாததேவியின் தாய் அரண்மனையிலே தானும் தன் சோழ குல மகாராணிகளும் பரம்பரை பரம்பரையாக வைத்து வழிபட்டு  வந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலினை பாதுகாப்புக்காக வழங்கினார். தன் அன்னையின் அன்புப்பரிசினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட சீர்பாததேவி; தன் கணவன் வாலசிங்கனுடன் சோழ மன்னனின் பிரதிநிதிகள் சூழ்ந்திருக்க கப்பலிலே அமர்ந்திருந்து அரசகுல பெண்களின் வாழ்த்தொலிகள் முழங்க கடல்வழியாக பயணத்தினை இறை தியானத்துடன் ஆரம்பித்தார். சிறப்பு பொருந்திய அரசகுலத்தவர்களின் கப்பல் என்ற படியால் அலை எழுப்புகின்ற கடல் அன்னை கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமின்றி அமைதியாக வழி கொடுத்தாள். 

தங்கு தடையின்றி கப்பல் வட இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இவ்வாறு வட இலங்கையின் சிங்கை நகரினை கப்பல் அண்மித்த வேளையிலே சீர்பாததேவி தன் அன்பு மன்னவனிடம் ஒரு வேண்டுகோளினை முன்வைத்தாள். அதாவது சிங்கை அரசனின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் தான் பார்வையிட வேண்டுமென்பதே அந்த வேண்டுகோள். தன் மனைவி தன்னிடம் கேட்கின்ற அந்த வேண்டுகோளினை ஏற்றுக் கொண்ட மன்னவன் இளவரசியின் விருப்பத்திற்கிணங்க தன் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமனைத்தினையும் பார்வையிடுவதற்காக கப்பலை கிழக்கு கரையோரமாக திருப்புமாறு கட்டளை பிறப்பித்தான். மன்னவனின் கட்டளைக்கிணங்க கப்பலும் கிழக்கு கரையோரமாக நகர்ந்தது. 

இலங்கையின் வளம் பொருந்தியதும் செழிப்பான பிரதேசமாகவும் காணப்பட்ட கிழக்கின் அழகினை கப்பலில் இருந்தவர்கள் ரசித்துக் கொண்டு சென்றனர். கிழக்கிலங்கையின் நீர் வளமும் நில வளமும் பச்சைப்பசேலென்று செழித்துக்கிடந்த மரங்களும் நீலச்சேலை விரிக்கப்பட்டது போன்று காணப்பட்ட கிழக்குக்கடலின் எழிலும் அவர்களை ஆச்சரியத்திற்கும் ரசனை உணர்விற்கும் இட்டுச் சென்றது. 

இவ்வாறு கிழக்கின் எழிலினை ரசித்தவண்ணம் உல்லாசமாக பயணித்துக் கொண்டிருந்த அவர்கள் கிழக்கின் முக்கிய இடமாக விளங்குகின்ற திருகோணமலை கடற் பிரதேசத்திலே பயணித்துக் கொண்டிருந்தபோது திருக்கோணேசர் பெருமானின் ஆலயம் அவர்களின் கண்களுக்கு புலப்பட்டது. கோணேசர் பெருமானின் ஆலயத்திற்கு கப்பலில் இருந்த அனைவரும் கோணேசப் பெருமானை மனமுருக வழிபட்டனர். இவ்வேளையில் கப்பலில் கோளாறு ஏற்படட்டது போல் கப்பல் ஆலயத்திற்கு முன்பாக தடைப்பட்டு நின்றது. கப்பலின் இவ்வாறான நிலமை அதிலிருந்த அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 

“கோணேசப் பெருமானை மனதிலே நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இவ்வாறு கப்பல் தடைப்பட்டிருப்பது இறைவனின் செயலன்றி வேறில்லை" என நினைத்த இளவரசியார் கப்பலில் இருந்த தன்னுடன் வந்தவர்களிடம் கப்பல் நின்றமைக்கான காரணத்தினை கண்டறியுமாறு பணித்தாள். அவ்வேளையில் அங்கிருந்தவர்களில் சிந்தன் என்பவன் அதனை அறியும் பொருட்டு நீரிலே இறங்கி கப்பலின் அடியில் சென்று கப்பல் ஏதாவது பாறைகளில் முட்டி இருக்கின்றதா? என்பதனை ஆராய்ந்தான். எனினும் கப்பல் அப்படியான எந்த ஒரு பொருளிலும் முட்டி மோதவில்லை. சாதாரணமான நிலையிலேயே காணப்பட்டது. அப்போது சிந்தனுடைய கண்களில் விக்கிரகம் ஒன்று தென்பட்டது. அதனை அருகே சென்று பார்த்தபோது அது ஒரு விநாயகர் விக்கிரகம் என்பது சிந்தனுக்கு தெளிவாகியது. எனவே இவ்விடயத்தினை அவன் கப்பலிலே உள்வர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தினான்.                      

இதனை அறிந்த அரசியார் மீண்டும் ஒரு முறை இறைவனை தியானித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அவ்விக்கிரகத்தினை மேலே கொண்டு வருமாறு பணித்தாள். அரசியாரின் வேண்டுகோளிற்கிணங்க சிந்தனும் அவ்விக்கிரகத்தினை நீரில் இருந்து வெளியேற்றி கப்பலிலே சேர்த்தான். அதனைக்கண்ட மன்னன் அரசியார் உட்பட்ட அனைவரும் வியப்புற்றனர். எவ்வாறு இவ்விக்கிரகம் கடலில் வந்து சேர்ந்தது என பலவாறும் வினவினர். எது எவ்வாறாயினும் இறைவன் செயலாகத்தான் இவ்விக்கிரகம் தமக்கு கிடைத்ததாக நினைத்த சீர்பாததேவியார் அவ்விக்கிரகத்தின்பால் ஒரு நேர்த்திக்கடனை முன்வைத்தார். அதாவது தாங்கள் பயணம் செய்யும் இந்தக்கப்பல் எந்த இடத்தில் தரித்து நிற்கின்றதோ அவ்விடத்தில் இவ்விக்கிரகத்தினை வைத்து பிரம்மாண்டமான ஒரு ஆலயத்தினை அமைப்பதாக கூறி கப்பலினை தொடாந்து செலுத்துமாறு கூறினார். அதன்படி கப்பலும் தொர்ந்து பயணத்தினை ஆரம்பித்தது. 

பயணத்தினை தொடர்ந்த கப்பலானது மட்டக்களப்பு வாவியின் தெற்குத் திசைநோக்கி பயணித்து வாவியின் அந்தமான வீரர்முனை என்ற இடத்தினை கரை தட்டியது. இந்த வீரர்முனை ஆதிகால ஆட்சி வரலாற்றில் முக்கியமான ஒரு இடமாக காணப்பட்டது. அதாவது கி.மு.237 தொடக்கம் கி.மு.215 வரையான காலப்பகுதியில் கூர்த்திகன் என்னும் தமிழ் மன்னன் தன் சகோதரனான சேனன் என்பவனுடன் இணைந்து அக்காலப்பகுதியில் அநுராதபுரத்தினை ஆட்சிசெய்த “சூரதீசன்” என்ற மன்னனை போரில் வெற்றி கொண்டு அநுராதபுரத்தை ஆட்சி செய்தான்; என்பதனை மகாவம்சத்தினூடாக அறிய முடிகின்றது. கூர்த்திகன் கி.மு.3ம் நூற்றாண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரத்தை அமைத்தான் எனவும் வீரர்முனை என அழைக்கப்படுகின்ற இவ்விடத்தில் காவல் அரண்களை அமைத்ததாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறு போர்வீரர்கள் காவல் அரணில் அமர்த்தப்பட்டதனால் “வீரர்முனை” என பெயர் வழங்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை. இவ்வாறான வரலாற்று சிறப்புக்கள் வாய்க்கப்பெற்ற வீரர்முனையிலே சீர்பாததேவியும் அவளுடைய குழுவினரும் வந்த கப்பல் கரை தட்டியது. 

இவ்வாறு வீரர்முனையிலே கப்பல் கரை தட்டி நின்றதும் சீர்பாததேவி மிகவும் மனமகிழ்ச்சியடைந்தார். காரணம் வீரர்முனையின் இயற்கை அழகும் வளம் பொருந்திய அமைவிடமும் ஆகும். மக்கள் வாழ்கின்ற பிரதேசத்திலே ஆலயம் அமைக்கப்படுகின்ற போதுதான் அவ்வாலயத்தினை பராமரித்து அபிவிருத்தி செய்ய முடியும். எனவே வீரர்முனை என்கின்ற இடமானது மக்கள் குடியிருப்புக்களை அமைப்பதற்கேற்ற அனைத்து விதமான வளங்களையும் வசதிவாய்ப்புக்களையும் கொண்டதொரு இடமாக காணப்பட்டது. இவ்வாறான இடத்தில் தங்களுக்கு கிடைத்த விநாயர் விக்கிரகத்தினை வைத்து அழகியதொரு ஆலயத்தினை அமைத்து இவ்விடத்தின் அழகினை மேலும் செழிப்படையச் செய்யும் நோக்கோடு கப்பலில் வந்தவர்கள் அனைவரும் தங்குவதற்காக அவ்விடத்தில் கூடாரங்கள் அமைக்கப்படன. 

வீரர்முனையிலே ஆலயம் அமைக்கும்பணி துரிதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் இக்காலப்பகுதியில் வீரர்முனையிலே எவரும் குடியிருக்காமையினாலும் கப்பலில் வந்தவர்கள் ஆலயம் அமைப்பதற்குப் போதாமையினாலும் பாலசிங்கன் வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்தவர்களை ஆலயம் அமைக்கும் பணியில் ஈடுபடுத்தினான். சிறந்த தேர்ச்சி பெற்ற கட்டிடக்கலைஞர்களினதும் மக்களினதும் முழுமூச்சான செயற்பாட்டினால் அழகியதும் சிறப்புமிக்கதுமான ஆலயம் அமைக்கப்பட்டது. சீர்பாததேவியின் நேர்கடன் நிறைவடைகின்ற தருணம் நெருங்கியதைத் தொடர்ந்து அரசியாரும் மன்னவனும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். ஆலயத்தின் நிர்மாண வேலைகள் யாவும் நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகளான கிரியைகள் செய்யும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. 

இதன் பலனாக சோதிடர் குறிப்பிட்டதும் ஆகம முறைக்கு ஏற்றதுமான ஒரு சுப நாளில் விநாயகப் பெருமானுடைய திருவுருவம் ஆலயத்திலே எழுந்தருளப்பட்டு ஆலயத்திலே செய்து முடிக்க வெண்டிய கிரியைகள் அனைத்தையும் பாலசிங்கன் செய்து முடித்தான். சிந்து யாத்திரையின் பயனாக (அதாவது சிந்து என்பது கடல் எனவே கடல் யாத்திரை என்ற அர்த்தத்தினை கொண்டது) கிடைத்த விநாயகர் என்றபடியால் சிந்து யாத்திரைப்பிள்ளையார் என திரு நாமம் சூட்டப்பட்டு வீரர்முனையிலே சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்கு திருவிழா எடுப்பித்து மகிழ்ந்தனர்; பாலசிங்கனும் சீர்பாததேவியும். 

தான் ஆலயம் அமைப்பதாக கொண்ட எண்ணம் நிறைவு பெற்ற மகிழ்ச்சி சீர்பாததேவியின் மனதினை ஆட்கொண்டது. எனினும் ஆலயம் அமைக்கும் பணி நிறைவடைந்தமையோடு தமது அரச குலத்தவர்களின் பணி இவ்வாலயத்தில் நிறைவு பெறக்கூடாது என்ற நன்நோக்கோடு தொடர்ச்சியாக இவ்வாலயத்தினை தன்னுடைய அரச பரம்பரையினர்தான் பராமரித்து சிறப்பிக்க வேண்டும் என்ற நீண்டதொரு எண்ணத்துடன் கப்பலில் தனக்க துணையாக வந்த தன் அரச பரம்பரையினை சேர்ந்த அரச குலத்தவர்களான சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்பழச்சி, முழவன், வெள்ளாயி, நரையாகி, போன்றோரையும் கண்ணப்ப முதலி என்னும் வேளாளர், முத்துநாயக்கச் செட்டி, சதாசிவச்செட்டி, சங்ரச்செட்டி போன்ற செட்டிமார்களும் சந்திர சேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் எனும் அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார் போன்றோரையும் வீரர்முனைக் கிராமத்திலே குடியமர்த்த முடிவு செய்தார் சீர்பாததேவியார்.


சீர்பாததேவியினால் வீரர்முனையில் கட்டப்பட்ட சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்

அரசியாரின் விருப்பின்படி சோழநாட்டு மக்கள் அனைவரும் வீரர்முனையிலே குடியமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு நிலம் சொத்துக்கள் என்பன வழங்கப்பட்டது. அது மாத்திரமன்றி ஆலயத்திலே பூசை வழிபாடுகள் செய்து வருவதற்காகவும் அதனைப் பராமரிப்பதற்காகவும் அவ்வாலயத்தினை அண்டி வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை வழமானதாக அமையவும் நெற்காணிகளையும் வழங்கி, அவர்கள் அனைவரையும் அழைத்து வாலசிங்க மன்னன் அவர்களை நோக்கி “இதில் அரச குலத்தவர்கள், அந்தணர்கள், செட்டிமார், வேளாளர் போன்ற அனைத்து குலத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றீர்கள் நீங்கள் அனைவரும் உங்கள் இளவரசியின் பெயரால் சீர்பாத குலம் என ஒரு குலமாக வகுக்கின்றேன். இன்று முதல் நீங்கள் அனைவரும் அரசகுலத்தவர், அந்தணர், வேளாளர், வணிகர் என்பதிலிருந்து விலகி சீர்பாதகுலத்தவர் என்ற பெருமையுடன் எக்காலத்திலும் உங்களுக்குள் வேற்றுமை இல்லாதவர்களாய் ஒற்றுமையாக வாழ்வதோடு சிந்து யாத்திரைப் பிள்ளையாருக்காக இது முதலாக வீரர்முனையிலே நிரந்தரமாக வாழ ஆரம்பிக்கின்ற நீங்கள் சாதாரணமானவர்கள் அன்று சோழ இளவரசியான சீர்பாத தேவியின் உறவினர்கள். அந்தவகையில் நீங்கள் அரசகுல கௌரவத்தினை உடையவர்கள். இதன்படியாக உங்களக்கு அரவிந்தமலர்,செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட அரசகுல விருதினை வழங்கி உங்களை ஈழத்திலே உயர்வானவர்கள் என்ற மதிப்பினையும் அளிக்கின்றேன்” என்று கூறினான். 

இவ்வாறான சிறப்புக்களுடனும் பெருமைகளுடன் சீர்பாதகுல மக்கள் வீரர்முனையிலே தங்கள் வாழ்க்கைப் பயணத்தினை சிந்து யாத்திரைப்பிள்ளையாரின் அருள் துணையுடன் தொடங்கினர். இவர்கள் தங்களுக்கென்று சிறப்பான கலாசாரம், பண்பாடு போன்றவற்றினை தனித்துவமானதாக்கிக் கொண்டு அவற்றின் வழி உயர்ந்த பண்புமிக்க மக்கள் சமுதாயமாக உருவாக்கம் பெற்றனர். 

இவ்வாறான சீர்பாதரின் வரலாற்று உண்மைகளை சீர்பாதகுலச் செப்பேடுகளான வீரமுனைச்செப்பேடு, திருகோணமலைச்செப்பேடு, திருக்கோவில் செப்பேடு, கொக்கட்டிச்சோலைச் செப்பேடு,  பேன்றவை குறிப்பிடுகின்றது. உதாரணமாக திருக்கோயில் செப்பேட்டுப்பாடலை எடுத்துக்கெண்டால்!

    சிந்துயாத்திரைப்பிள்ளையார் நாமத்துடன்
    நித்திய பூசை நியமமாகச் செய்து
    விநாயகர் ஆலயம் விளங்கிடும்பொருட்டு
    செந்நெல் விளைவு நிலங்களும்
    தேவாலயத்தின் திருப்பணி சாமான் 
    எல்லாவற்றையும் எழுத்தில் வரைந்து…
    சீர்பாததேவியின் திருப்பெயரால்
    சீர்பாதகுலமென சிறந்த பெயர்சூட்டினர்
    அரசர்கும் தேவர்கும் அரும்விருந்தான
    வெற்றிக்கொடியை விரும்பிக்கொடுத்து…… எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், பாண்டியமன்னனான மாகன் சாதிகளுக்கான குலவிருதுகள் வகுத்தான். இக்குல விருது கூறும் கல்வெட்டில் சீர்பாதரை அமரர்(தேவர்) எனக் குறிப்பிட்டு அவர்களுக்கான குலவிருதான தேர்க் கெடியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


சீர்பாதர் வாழ்கின்ற இடங்கள்

சீர்பாத குலம் கிழக்கில் பெருகி வாழ்ந்தமைக்கு காரணமாக அமைந்த இடம் என்ற பெருமையுடைய வீரமுனை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைந்து காணப்படுகின்றது. இது மட்டக்களப்பு வாவியின் தெற்கு அந்தத்தில் இருப்பதாகும். இது 4 பிரிவுகளைக் கொண்டது இங்கு 700ற்கு மேற்பட்ட குடும்பங்களையும். 3000க்கு மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டுள்ளது. சீர்பாதகுலத்தவர் வாழும் இடங்களிலே அதிகளவு நெற்காணிகளைக் கொண்டுள்ள இவ்விடம் விவசாயத்தில் சிறப்புற்று விளங்குகின்றது. இவ்வூரில் சீர்பாததேவியினால் சிந்தாத்திரப்பிள்ளையார் ஆலயம் கட்டப்பட்டு அதற்கு கிண்ணறையவெளி, தரவை முன்மாரி, மல்வத்தை வெளி, கறங்கா வட்டை போன்ற நெற்காணிகள் வழங்கப்பட்டது.

வீரமுனையில் சிந்துயாத்திரைப் பிள்ளையார் கோயில், கண்ணகியம்மன் ஆலயம், வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயம், மாணிக்கப் பிள்ளையார் ஆலயம் என்பன அழகுற விளங்குகின்றன. மேலும் சீர்பாததேவியின் பெயரில் சிறுவர் இல்லமொன்று அமைக்கப்பட்டு அதில் பொருளாதார பின்னடைவு மற்றும் பெற்றோர் இழத்தல் போன்ற காரணங்களினால் கல்வி கற்க முடியாமல் இருக்கின்ற சிறுவர்கள் வர்க்க பேதமின்றி இணைக்கப்பட்டு அவர்கள் கல்வி கற்பதற்கான சகல வசதிகளும் வழங்கப்படுகின்றன. அத்தோடு அம்பாரை மாவட்டத்திலே இருக்கின்ற சிறுவர் இல்லங்களில் சிப்பும் முன்னேற்றமும் கொண்ட இடமாக இது விளங்குவதோடு இவ்வில்லத்தினை சேர்ந்த சிறுவர்கள் ஏனைய சிறுவர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றனர். இங்கு சீர்பாததேவிக்கு சிலையொன்றும் வைக்கப்பட்டுள்ளது. வீரமுனையில் காலதேவன், காங்கேயன், முழவன், பொட்டப்பழச்சி. சிந்தன், பாட்டுவாழி, வெள்ளாகி, நரையாகி, படையன், பரதேசி என பத்து குடிகள் உள்ளன.


அடுத்தபடியாக மல்வத்தை, வீரச்சோலை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி போன்ற கிராமங்களும் சீர்பாத மக்கள் வாழ்கின்ற முக்கியம் வாய்ந்த இடங்களாகும். இவ்விடங்கள் வீரமுனை கிராமத்தோடு மிகமிக நெருங்கிய தொடர்புகளை கொண்டவை. இவ்விடங்களை வீரமுனை மக்கள் வெளியிடங்களாக ஒரு போதும் நினைப்பதில்லை, மாறாக இவற்றை வீரமுனையின் பகுதிகளாகவே கணிப்பிடுகின்றனர். மேலும் இக்கிராமங்களில் வாழ்பவர்கள் வீரமுனை மக்களின் மிக நெருக்கமான உறவினர்களாவர். எனவே இவ்விடங்கள் பற்றி அதிகமாக குறிப்பிட வேண்டியதில்லை. இக்கிராமங்களில் வாழ்கின்றவர்களும் சீர்பாதர்களின் பண்பாடுகளையும் கலாசாரங்களையும் பேணி பாதுகாப்பவர்களாகவும் சீர்பாத குலத்திலும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலும் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்களாகவே உள்ளனர். அத்தோடு 1990ம் ஆண்டு வீரமுனையில் இடம் பெற்ற கலவரத்தில் உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் இக்கிராமங்களை சேர்ந்தவார்;களே என்பது குறிப்பிடத்தக்கது.  

மட்டக்களப்பின் வடக்கே இறுதி எல்லைக் பிரதேசமாகக் காணப்படுவது துறைநீலாவணைக் கிராமமாகும். இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில்;, மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்க்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் சனத்தொகை 2005ம் ஆண்டில்4563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் வரலாறு சீர்பாத குலத்தோடு தொடர்புடையது.

சோழ நாட்டில் இருந்து சீர்பாத தேவிக்கு துணையாக வந்தவர்கள் இறைவனது அருளால் வீரமுனை வந்து சீர்பாத குலமாகி வீரமுனையில் வாழ்ந்தமை யாவரும் அறிந்ததே. வீரமுனையில் வாழ்ந்த சீர்பாத குலத்தினர் காலத்தின் ஓட்டத்தினால் பெருகி வந்தனர். மக்களது பெருக்கத்துக்கு ஏற்ப உழுது வாழும் தொழில் வளம் வீரமுனையில் பெருகவில்லை. ஆதலினால் வீரமுனையில் வாழ்ந்தவர்களது கவனம். உழுது பயிரிடுவதற்கு ஏற்ற புதிய இடங்களை நாடுவதில் சென்றது. அதன் பயனாக மட்டக்களப்பு வாவியை அண்டிய பல இடங்கள் அவர்களது கவனத்தை கவர்ந்திழுத்தன.

முதலில் நீலன் அணைப்பகுதி அவர்களது நோக்கிற்கு உகந்த இடமாக தோன்றியது. ஆகவே நீலன் அணைப்பகுதிக்குச் சென்று உழுதொழில் செய்வதற்குரிய ஆயத்தங்களை ஏற்படுத்தினர். காடுகளை அளித்தும், காணிகளை செப்பனிடுவதும் பயிர்களை பாதுகாப்பதும் முதலில் சிரமமாகவே இருந்தது. ஆதலினால் நீலன் அணைப்பகுதியில் நிரந்தரமாய் குடியேறிவாழலாயினர். வளம் ததும்பிய மேற்குப்பகுதியும் அவர்களது கவனத்தை ஈர்த்தமையினால் துறையமைத்து போக்குவரத்து செய்தார்கள். அதன் பயனாக நீலன் அணையெனும் பெயர் துறைநீலன் அணையென வழங்குவதாயிற்று. காலவரையில் துறைநீலாவணையென அழைக்கப்படலாயிற்று. குடியேறிய மக்கள் சூழவுள்ள பள்ள நிலங்களை விவசாய நிலங்களாக செப்பனிட்டார்கள். மேற்குக் கரையிலுள்ள மேட்டு; வயல் வெளிகளில் மந்தை வளர்த்தார்கள். மேட்டு நிலங்களில் இல்லங்கள் அமைத்து வாழத் தொடங்கினர். 

மேலும் இக்கிராமம் மண்டூர் கோயில் தோற்றத்தோடு தொடர்புடையது. அதாவது சீர்பாததேவி வழிபட்டு வந்த வேலினை சிந்தன் அங்கு சீர்பாதகுலத்தவரிடையயே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எடுத்துச் சென்று தி;ல்லை மரத்தின் மீது பதித்துவைத்தான். அவ்வேலே மண்டூர் கந்த சுவாமிகோயிலில் வழிபாட்டுக்குரிய வேலாக விளங்குகின்றது. அவ்வேலினைக் கொண்டுவந்த சிந்தன் துறைநீலாவணையிலேயே வாழ்ந்தான் இதனால் இங்கு சிந்தாத்திரன் குடியானவர்கள் அதிகளவாக வாழ்கின்றனர். 

சிந்தாத்திரன், பழச்சிகுடி, காலதேவன்குடி, படையாண்ட குடி, கங்கேயன்குடி, பரதேசிகுடி, வெள்ளாகிகுடி, நரையாகி குடி, ஞானி குடி, பாட்டுவாழி குடி, முடவன் குடி என 11 குடிகளை துறைநீலாவணைச் செப்போடு கூறுகின்றது. துiநீலாவணைக் கிராமத்திலே சிந்தாத்திரன், பாட்டுவாழி, முடவன் குடியினரே அதிக முக்கியத்துவத்தினை உடையவர்களாகக் காணப்படுகின்றனர், இவர்களே கண்ணகியம்மன் ஆலய நிருவாகிகளாகவும் உள்ளனர். 

சீர்பாத குலமக்கள் செறிந்து வாழும் ஊர்களில் குருமண் வெளியும் ஒன்றாகும். இவ்வூர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தென் எருவில்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ளது. இது சீர்பாத குலத்தவர் குடியேறிய எல்லா இடங்களிலும் பார்க்க நீர்வளமும், மண்வளமும் பொருந்திய இடம் இது தான். இவ்வூர் மண்ணை அடிப்படையாகக் கொண்டு குருமண் என்று பெயர் சூட்டினர். காலக்கிரமத்தில் குருமண் வெளியென மருவிற்று. இவ்வூர் குருமன்வெளி கிழக்கு, மேற்கு, குருமன்வெளி12 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்த சனத்தொகை 3652 ஆகவும் மொத்த குடும்பங்கள் 960 ஆகவும் உள்ளன. இங்கு பிரதான தொழில் விவசாயமாகும். இவ்வூரின் வரலாறு சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது. 

சீர்பாதகுல மக்களில் பலர் மட்டக்களப்பு வடக்கு நோக்கிச் சென்று குறுமன்வெளியில் குடியேறினார்கள். இங்கு குருமண் வெளியைச் சுற்றிவர பெரிய 4 குளங்களும், குளத்து நீர் பாயத்தக்கதாக வயல்வெளிகள் வாவிக்கரைவரையும். சுற்றிவரக் குளங்கள் இருந்தமையினால் இங்கு விவசாயம் செய்வது இலகுவாக இருந்தது. 

 ஐயர் மார் குருமண்வெளியில் இருந்ததினால் இங்கு இந்தியாவிலிருந்து வந்த ஐயர்மார் திருமணம் செய்வதற்கு வாய்ப்பாக இருந்தது. குருமண் வெளிக்கு மேற்குப்பக்கத்தே வாவிக்கு இடைப்பட்ட விவசாயக் காணிகளில் சில பங்குகள் இச்சமூகத்திலுள் ஐயர்கள் பெயர்களால் அழைக்கப்படுவது நம் கவனத்தினை ஈர்ப்பதாய் உள்ளது மேலும் நீண்டகாலமாக இக்கிராமத்தில் ஐயர் பரம்பரை வாழ்ந்து வருவதனையும் இதற்கு முன் ஐயர் பரம்பரையின் ஒரு பிரிவினர் விபூதி தயாரித்து மட்டக்களப்பு பிரதேசம் எங்கும் விநியோகித்து வந்தமையும் இவர்கள் “திருநீற்று ஐயர்கள்” என்று இவர்களை அழைக்கப்பட்டமையும் அங்குள்ள பெரியோர்கள் நினைவில் உள்ளதனை அவதாணிக்க முடிகின்றது.

குருமன்வெளியின் மத்தியில் சித்திவிநாயகர் ஆலயமும், மரியம்மன் ஆலயமும் இணைந்து பொன்னொளி பரப்புகின்றன. இது தவிர நாகதம்பிரான், ஸ்ரீமாவிஸ்னு ஆலயமும், பத்திகாளியம்மன் ஆலயமும் புகழ்மிக்கவை இவ்வூரில் தொடுகை வயல்கள், விடுவயல்கள் குருமண்வெளி கரைச்சை வெளி நெற்காணிகள் என்பன உள்ளன இவை அவ்வூரில் சித்திவிநாயகர் ஆலயத்திற்கே உரித்தானவையாகும் இங்கு பாட்டுவாழி, காங்கேயன், காலதேவன், பழையன், முழவன், சிந்தன்,  பொட்டப்பறைச்சி, வெள்ளாகி, நரையாகி குடிகள் என்பனவும் இவை தவிர்ந்த பரதேசி, ஞானி குடிகளும் காணப்படுகின்றது. இவ்வாறாக குருறுமண்வெளியில் எட்டுக் குடிகள் உள்ளன. இவ் எட்டுக் குடிகளுக்குமே சித்திவிநாயகர் ஆலயத்திற்கு நிருவாகத்தினராக இருக்கும் உரிமையடையவர்களாக உள்ளனர். இங்கு நிருவாக முறைமை 8க் குடிக்கும் குடித்தலைவர் தெரிவு செய்யப்படும் இவரை அடம்பன் என்றும் கூறுவதுண்டு இங்கு எடடுக் குடித் தலைவர்களும் ஏகோபித்த சம்மதப்படியே தலைவர் தெரிவு செய்யப்படுகின்றனர் இவரை வண்ணக்கர் என்றும் அழைப்பது மரபாகும். இங்குள்ள நிருவாகம் 9 பேர் சேர்ந்தது பொருளாளர், செயளாளர் தெரிவுசெய்யப்படுவர்.

எட்டுக் குடிகளுக்கும் விசேட பூசை பகிர்ந்நதளிக்கப்பட்டுள்ளது அந்தப் பூசைகளை அப்பூசைக்குரிய குடித்தலைவரும் குடிமக்களும் சேர்ந்து சிறப்பாக செய்து முடிப்பர். சிறப்பான பூசைக்கு வட்டா வைக்கும் முறை சிறப்பானது இது தவிர்ந்த கார்த்திகை விளக்கீட்டுப் பூசை காங்கேயன் குடிமாத்திரம் சுவாமி ஊர்வீதி வலம் வருவதுடன்  வெளிவீதியும் வலம் வருவார்கள் இவ்வாறு இவ்வூரில் ஆலயத்தினுடாக மரபுகள் பின்பற்றப்படுவதனைக் காணலாம.; அவ்வூரில் சீர்பாததேவி சிறுவர் பாடசாலை ஒன்று கட்டியதோடு அங்கு அருள் செல்வநாயகததின்; நோக்கத்தினை நிறைவு செய்யும்முகமாக சீர்பாததேவிக்கு சிலை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் அறிஞர் செல்வநாயகத்தினை பெற்றெடுத்த இவ்வூர் மண்டூர் கணக்கப்பிள்ளைகளில் ஒருவராக இருப்பதுடன் மண்டூர் ஆலயத்தின் 11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானிக்குடியினர் புஸ்ப விமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்களாகவும் உள்ளனர். இதை விட 12ம் திருவிழா, 14ம், 16ம் திருவிழா குருமண்வெளி மக்களால் நடத்தப்படடு வருவது குறிப்பிடத்தக்கது.
வீரமுனை, துறைநீலாவணை, குருமண்வெளி போன்ற இடங்களில் சீர்பாதகுலத்தவர் அதிகம் வாழ்வதைப் போன்று சேனைக் குடியிருப்பிலும் வாழ்கின்றனர். இது அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை தமிழ்பிரிவில் அமைந்துள்ளது சேனைக்குடியிருப்பு1, சேனைக்குடியிருப்பு1டீ, சேனைக்குடியிருப்பு2யு என்னும் மூன்று பிரிவுகள் கொண்டமைந்துள்ள இது 3228 மக்கள் தொகை கொண்ட அழகிய கிராமமாகும். இங்கு வடக்கிலும் மேற்கிலும் பல விவசாய நிலங்களைக் கொண்டமைந்துள்ளதால் இவர்கள் விவாசயத் தொழிலை மேற்கொள்கின்றனர். இங்கு சிந்தன், பாட்டுவாழி, முடவன், பொட்டப்பழச்சி, நரையாவி. வெள்ளாகி, பரதேசி காலதேவன், காங்கேயன் குடிகள் உள்ளன.

சீர்பாத குலமக்களில் ஒரு சாரார் தொழில்வளம் நாடி அயல் இடங்களுக்கு சென்றனர் அதில் மட்டக்களப்பு வாவியின் கிழக்கு கரையோரமாக சென்று காடுகளை வெட்டி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பள்ளநிலங்களையும் திருத்தி வயல் நிலங்களாக்கினர். இவர்களோடு வீரமுனையில் இருந்து வந்தவர்களும் சேர்ந்து சேனைச் செய்கையில் ஈடுபட்டார்கள் அவர்கள் அங்கேயே நிலையாகக் குடியேறினர். இவர்கள் இவ்வாறு குடியேறிய இடம் சேனைக்குடியிருப்பு என அழைக்கப்படலாயிற்று. சேனைக்குடியிருப்பின் ஓர் அந்தம் மட்டக்களப்பு வாவியின் துறையாக விளங்கியது.  இத்துறை கிட்டங்கித் துறையென அழைக்கப்படுகின்றது.

சேனைக்குடியில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் என்பன முக்கியமான ஆலயங்களாகும். இதில் பத்திர காளி ஆலயத்தின் திருவுருவம் தென்மேற்கு திசையிலுள்ள சொறிக்கல் முனையில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்தவகையில் சேனைக்குடியிருப்பில் வாழ்கின்ற சீர்பாதகுலத்தவர்கள் சீர்பாத குலப்பண்பாடுகளையும் சிறப்புக்களையும் பேணிப்பாதுகாப்பவர்களாக விளங்குகின்றனர்.

மேலும் சீர்பாத குலத்தவர்கள் வாழ்கின்ற இடங்களில் நாவிதன்வெளி, 7ம் கிராமம், 15ம் கிராமம், தம்பலவத்தை, 13ம் கிராமம், சென்றல் கேம், 6ம் கிராமம், இறாணைமடு போன்ற மேலும் பல கிராமங்களும் விளங்குகின்றன. இவ்வாறான கிராமங்களில் சீர்பாத குலத்தவர்கள் தங்களின் குலப்பண்புகளோடு ஓற்றுமைமிக்க கூட்டுச் சமூகமாக வாழ்கின்றனர்.   
  • சீர்பாதர் குல செப்பேடுகளும் ஆராய்ச்சியும

    ஒரு குறிப்பிட்ட வரலாற்றினை எடுத்து பார்க்கின்ற பொழுது அவ்வரலாறு தொடர்பான சான்றாதாரங்கள் மிகவும் முக்கிமானவையாகும். அவ்வாறான ஆதாரங்களே குறிப்பிட்ட வரலாற்றின் உண்மைத்தன்மைக்க அதாரமாக அமையும். இன்று 21ம் நூற்றாண்டில் வாழந்த கொண்டிருக்கின்றோம். எனினும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த விடயங்களையெல்லாம் இன்று ஆய்வு செய்கின்றோம். ஆரம்ப கால மனித சமுதாயம் எவ்வாறான இயல்பினை கொண்டது, எவ்வாறான சிறப்புக்களை கொண்டது என பலதரப்பட்ட விடயங்களை நாம் இன்று கண்டறிகின்றோம். இவ்வாறன கண்டு பிடிப்புக்களுக்கு சான்றாதாரங்கள் இன்றியமையாதவையாகும்.

    அந்த வகையில் சீர்பதகுலம் தொடர்பான விடயங்களும் பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான விடயங்களை அறிவதற்கு சீர்பாதகுலச் செப்பேடுகள் ஆதாரங்களாக விளங்குகின்றன. சீர்பாததேவியினால் வீரர்முனையில் விநாயகர் ஆலயம் அமைக்கப்பட்டதன் பின்னர் ஆண்டு தோறும் சீர்பாததேவியும் பாலசிங்கனும் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையாரை வழிபடுவதற்காக வீரர்முனை கிராமத்திற்கு வருவது வழமையாக காணப்பட்டது. இவ்வாறு வருகின்றபோது வீரர்முனையை அண்மித்த பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களையும் அவர்கள் தரிசிப்பது வழக்கமாக இருந்தது. இதன்போது அவர்கள் வீரர்முனை தொடர்பான விடயங்களை அவ்வாலயங்களில் செப்பேடுகளில் பொறித்து வைத்தனர். அவ்வாறான செப்பேடுகள் சீர்பாதகுலம் பற்றிய தகவல்களை வழங்குவனவாக உள்ளன. அந்தவகையில் பின்வரும் செப்பேடுகள் சீர்பாதகுலத்திற்குரிய செப்பேடுகளாக விளங்குகின்றன.  

    01.வீரர்முனை செப்பேடு
    பாலசிங்கனால் வீரர்முனையில் சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு அரச குலத்தவர்கள் குடியேற்றப்பட்டதும் பாலசிங்க மன்னனால் அவ்வாலயம் தொடர்பான விடயங்களும் அதற்கு வழங்கப்பட்ட சொத்துக்களையும் மன்னன் செப்பேட்டில் பொறித்து அவ்வாலயத்தில் சேமிக்குமாறு பணித்தான். அவ்வாறு வீரர்முனையில் சேமிக்கப்பட்ட செப்பேடு வீரர்முனைச் செப்பேடு என வழங்கப்படுகின்றது. அது பின்வருமாறு

    கலிங்க தேசத்தின் கண்ணின் மணியாய் 
    இலங்கப் பிறந்திடும் இராசாதி இராசனாம்
    உக்கிர சிங்கனின் உறைவிடம் கண்டி
    மிக்க புகழ் நின்ற விற்பனை கன்னிகை
    மருதப்புர வீக வல்லி என்பாளை 
    பேருற மணந்து பெற்றிடும் மகனாம்

    வால சிங்கனென வலிவுறு சிங்கம்
    வேல்விழி மாடவர் விரும்பிடு சிங்கம்
    குலைகள் அறுபத்து நான்கிலும் வலியன்
    தோலைவில் விண்ணில் துரிதமாய் செல்லும் 
    முந்திர வித்தையும் மாண்புற கற்ற 
    சுந்தர ரூபன் சோழநா டேகி


    ஆரவா பாணன் அடியினை மறவா
    குமராங்குசனென கூறு பெயரினன் 
    சுறறந்திடு சோழன் அருந்தவப்புதல்வி

    சீர்பாத தேவியை திருமணம் செய்து

    ஈழநாடேகி என்னும் கால் 
    சோழ மாமன்னன் துணையாட்; களாய்
    முன்னர் குலத்து மக்களை அனுப்ப
    ஏண்ணம் கொண்டு இன்புடனாய்ந்து

    திரு வெற்றியூர் சேர்ந்திடும் அயலிலும்
    பெருந்துறையூர் பின்னர் தன் மருங்கிலும்
    கட்டுமாவடி கரையிரு புறத்திலும்
    மட்டுக்கூங்கிய மறுபுறங்களிலும்

    சிந்தன் பழையன் சீர்காங்கேயன் 
    சந்திரசேகர சதாசிவச் செட்டி 
    காலதேவன் கண்ணப்ப முதலி
    ஞாலம் புகழ் முத்து நாயக்கன்
    ஆச்சுத ஐயர் அவர்களது
    இச்சை மனைவியரும் இன்னும் பலரையும்
    சேர்த்துக் கப்பலில் சிவனை நினைத்து
    வுhழ்த்துக் கூறி வழியனுப்பியே செல்ல

    குப்பலும் கடல்மிசை அப்பனருளால்
    சேப்பம் தாகவே தீங்கெதுவும் இன்றி
    ஓடிவருங்கால் உயர்ந்தோர் நிதமும்
    புhடிப் பரவும் பரமனங் குசனாம்
    கோணேசர் வாழும் கோயில் முன்பாக 
    நூனாதிக் கொன்றினும் நகராது நிற்க

    ஓலம் ஓலமென் றுமையாள் கொஞ்சும்
    புhலனவனை பணிவுடன் வேண்டி 
    நேர்ததை அறிய நேரிழை நல்லாள்
    தேர்ந்தவர் தமக்கும் செப்பவே அன்னார்

    ஆழ்கடலில் இறங்கி இலசிப்பார்க்க
    நீள்புவி போற்றும் நிமலனைங்கரனின்
    திருவின் உருவச் சிலைதனை எடுத்து
    உருவிலேற்ற அரசனும் அரசியும்

    எங்குதானோடினும் எம்மவரின் கப்பல் 
    தங்குதடையின்றி தட்டினால் கரையில்
    அவ்விடம் ஆலயம் ஐயனே உனக்கு
    செவ்விதாய் அமைத்து சிறப்பொடு பூசனை
    நாடொறும் செய்வோம் நலம் புரிவாயென
    பாடிப்பரவி மன்றாடி யேநீர்

    சிலையைத் தாங்குமத் தெய்வீகக்கப்பல்
    அலைகடல் மீதே அல்லலுறாமல்
    மட்டுக்களப்பு வாவியை அண்டி 
    முட்டுப்படாமல் மோதி நில்லாமல்
    ஒரே திசையாயோடி உறைவிடம் இதுவென
    வீரர்முனைக்கரை விருப்புடன் நின்றதே

    அரசனும் அரசியும் ஆனைமாமுகற்கு
    பரிவுடன் ஆலயம் பாங்குடன் அமைத்து
    சிந்தர் குலத்திர் தெய்வீகச் சிலையதை
    சிந்துயாத்திரைச் சின்னமென்றிருத்தி

    மண்டலாபிசேகம் மாண்புறச் செய்து
    அண்டர்கள் போற்றும் ஐயனைப் பணிந்து
    சித்தி விநாயகர் சிந்து யாத்திரை
    பிள்ளையாரென பெயரும் சூட்டி

    தக்கபுகழாவ தகுவிழா வமைத்து
    எக்காலத்துமிவ்விழா நிலைத்திட
    பக்குவம் செய்து பல்வகை வாத்தியம்
    தொக்கு முழங்கிட தொன்னன் மரபாம்
    தம்மோடு வந்த தமதுறவினரை
    செம்மனதுடனே திருக்கோயிற்பணி

    புரியச் சொல்லி பூமி பகிர்ந்து
    துனித்தனியளித்து தான் வணங்கி வந்த
    துங்க வேலினையும் சாமிக்களித்து

    முங்கள கீதம் பா மகிழ்வாய்ப் பாடி

    ஓர் பெயரினால் ஓர் குலத்தவரென
    சீர்பாததேவி யென் திருப்பெயர் சூட்டி
    சீர்பாத குலம் சிறந்து விளங்கிட
    பேராக வென்னாளும் பெருகி வாழ்ந்திட

    ஆரவிந்த மலரும் அழகுசெங் கோல்கொடி
    துரமாய்ப் பொறித்த தனிவிரு தேந்தி
    அரசகுலமென அன்பாய் வாழ்த்திட
    வாழ்த்தி நல்லாசி வழங்கவே பாலசிங்கன்
    தாழ்த்திச் சிரமது தான் பணிந்தனரே 

    சாசணம்
    கிண்ணறையன் வெளி கீற்றுத்துண்டு
    மல்வத்தை வெளி மல்வத்தை குளம்
    தரவை முன்மாரி சரிசம மாகிவிடும்
    கரந்தை முன்மாரி கனசிறு நிலங்கள்
    நரசிங்க னென நற்பெயர் பெறும்
    வால சிங்கனுமே மானியமாக
    சாசன மெழுதி சகலருக்குமீந்தான்

    02.திருகோணமலைச் செப்பேடு
    திருகோணமலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான விடயங ;கள் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பான பல சிறப்புக்களை திருகோணமலைச் செப்பேடு பின்வருமாறு விளக்குகின்றது.

    திருமருவு காட்டுமாவடி பெருந்துறை சிந்த
    உத்தர தேசமும்
    செப்ப முடனேயுறைந் தொப்பித மிலாமலே
    செகமீது வரு தீரனாம்
    தருமருவு தெரியலவர் கொடி பெருமை தவள நிறத்
    தகமிவை தனிவிளக்கு
    தகமை பெறு பூனுலுடன் கவச குண்டலஞ்
    சரசமலர் முரசாசனம்
    அருமைசெறி ஆலாத்தி குடைதோரணமோடரிய
    மதில் பாவாடையோன
    அரசியின் குலமென அவள் நாமமே பெற்று
    அன்று சீர்பாதமானோன்
    உருமருவு தரையினில் அரிய புகழ்செறி
    உலகுமகிழ் மகிமையுடையோன்
    உரை விருது தனையுடைய ஆரியநாடு திரு
    வெற்றியூரரசு புவிவீரனே.

    03. திருக்கோயிற் செப்பேடு
    திருக்கோயிலில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சீர்பாதகுலம் தொடர்பாக விளக்கும் திருக்கோயில் செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.

    திருவருள் கயிலைச் சிவனரள் புரிய
    மருவளர் ரிலங்கை மன்னனாம் வால
    சிங்கனென்னும் சிறந்த பேருடையான்
    சித்து வித்தையில் செகமெச்சிய தீரன்

    கயிலை ஞானம் அறுபத்து நாலும் கற்றுத்தேறினோன்
    இருக்கு யசுர் சாமம் அதர்வமெனும்
    வேதம் நான்கும் விரும்பி யுணர்ந்தோன்
    குமண குளிகையின் கார சக்தியால்
    நூன தேசவள விகற்பங்களை
    நன்றாய் அறிந்தோன் ஈழதேசமெனும்

    இலங்கா புரிக்கு இராச தானியென
    கண்டிமா நகரை கனம் பெற வகுத்து
    செங்கொல் செலுத்தி தேசத்தை யாளுகையில்
    மன்னனு மப்பொ மணஞ்செய்யக் கருதி

    துன்னு திரைகடல் துரிதமாய் தாண்டி 
    மன்னு சோழன் மாதவப் புதல்வியை
    மணமாலை சூட்டி மகிழ்ந் திருக்கையில்
    இராசனும் தன் பவனாகிய ராணியாம்
    அம்மா ளுடன் சனங்களையும் சேர்த்து
    சந்தோச மாக தென்னிலங்கா புரி

    சேர விரும்பி ஆரியநா ட்டு 
    ஆந்தணர் தம்மில் அச்சுதனையங்கார்
    ஆவர் மனைவி செந்திரு மாது
    தேவியா ருடன் திருவெற்றி யூரின் 
    சுpவனடி மாறவ சந்திர சேகர
    சுமய தீட்சதர் தையலாள் பார்வதி
    குட்ட மாவடி கண்ணப்ப முதலி
    முத்து நாயக்கன் முதலியோருடன்

    குடி மக்களை கூட்டிச் சேர்த்து
    கப்பலோட்டக் கைதேர்ந் தவரில்
    சங்கரச் செட்டி சதாசிவச் செட்டி
    இவர்களை யேற்றி இராசனும் மிராணியுமேறி
    தென்னிலங்காபுரி திசை நோக்கி வருகையில்
    திருகோணமலை திரைகடல் நடுவில்

    கட்டிய தன்மையாய் கப்பலும் நின்றது
    நின்றிடும் கப்பலை கண்டது மரசன் 
    காரண மேதென கண்டறி வீரென
    ஏவ லாளர் இறங்கிப் பார்க்கையில்

    ஐந்து கரமும் யானை முகமும்
    அங்குச பாசமும் தாங்கிய கையுடன்
    எங்கள் பிரான் எழுந்தரளி யிருக்கின்றாரென
    அவ்வரை கேட்டு அரசனும் திகைத்து
    அந்தணர் தங்களை அன்படன் பார்த்து
    ஐயனே நீங்கள் ஆழியில் இருக்கும்
    மேய்யனை கப்பலில் விரைவுடன் சேரென
    ஆவ்வார்த்தை கேட்டு அந்தண ரானொர்

    கண்ணீர் சொரிய கசிந்த மனதுடன்
    வெள்ள மதம்பொழி வினாயக பிரானை 
    உள்ளன்புடன் ஊக்கமாய் நின்று 
    கணேசனை வாவென கைகூப்பித் தொழ

    அவ்வுரு வாகும் ஐங்கரத் தண்ணல்
    திருவடி தன்னை சீக்கிரம் காட்ட 
    கடலில் இருந்த கருணாகரனின் 
    பாதார விந்தம் பற்றிச் சேர்த்தனர்

    பற்றிய பொழுது பாராளு மன்னன்
    சித்தம் மகிழ்ந்து திருவடி வணங்கி
    ஐந்து கரனே இச்சிந்து யாத்திரையில் 
    ஊன்திருவடி காண என்தவம் புரிந்தோம்
    எத்தினோம் என்று இறைஞ்சிப் பணிந்து
    கருணா கரனே இக்கப்பலானது  

    கண்டிமாநகர் கரையை அடைந்தால் 
    ஆலயம் அமைத்து அவ்விடத்தி லிருத்தி  
    பூசை செய்விப்பேனென பூபதி போற்றினான்
    இவ்வாறு வாய்திறந்து இராசனும் துதிக்க
    செவ்வாய் மடலாள் சிரசில் கைகூப்ப 

    கணேச னருளால் கப்பலுமோடி 
    சம்மாந்துறை சார்ந்திடு நகரம் 
    வீரர்முனையென விளம்மிய திக்கரை 
    கப்பல் செர கண்டு எல்லோரும் 
    கப்பலை விட்டு கரையில் இறங்கி

    தச்சர் சித்தர் தட்டார் முதலிய 
    குடி மக்களை கோவு மழைத்து
    ஐங்கரன் கடவுளுக்கு ஆலய மொன்று
    சீக்கிரம் அமையென செலவு கொடுக்க 

    அரச னுரைப்படி அலயம் அமைத்தார்
    அந்தண ராதியோர் அபிசே கித்து
    விநாயகர் பெருமானை வீழ்ந்தடி பணிந்து
    கோமா னுரைப்படி கோயிலுள் வைத்தார் 

    கண்டி யரசன் கணேசப் பெருமானை
    சிந்த யாத்திரையுள் திருவடி கண்டதால் 
    சிந்த யாத்திரைப் பிள்ளையார் நாமத்துடன்
    நித்திய பூசை நியமமாக செய்து
    விநாயகர் ஆலயம் விளங்கிடும் பொருட்டு 
    செந்நெல் விளைவு சிறந்த நிலங்களும்

    தேவால யத்தின் திருப்பணி சாமான் 
    எல்லா வற்றையும் எழுத்தில் வரைந்து
    அந்தணர் தங்களை அரசனழைத்து
    பாசாங்கு சங்கரன் பாதார விந்தம்
    பாற்கடல் மீது பற்றிச் சேர்ந்ததனால்
    சீர்பாத தேவியின் திருப் பெயராற்
    சீர்பாத குலமென சிறந்த பெயர்சூட்டி

    அரசர்க்கும் தேவர்க்கும் அரும் விருந்தான
    வெற்றிக் கொடியை விரும்பிக் கொடுத்து
    வணிகர் தம்மையும் வரும்படி செய்து
    இரு சாதியாரும் இசைந்தெக் காலமும்
    ஆட்சி புரியுமென்று ஆசீர் வதித்து

    எழுந்தைப் பரராசன் இவர்களுக் கீந்து
    குடி மக்களால் கோயில் சிறக்க 
    சாதிக் காணிகள் சகலருக்கும் கொடுத்து
    செங்கோல் வேந்தனும் தேவியுமாக 
    கண்டிமா நகரை கனம்பெற வடைந்தார்

    04.கொக்கட்டிச்சோலை செப்பேடு
    கொக்கட்டிச்சோலையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொட்hபான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான கொக்கட்டிச்சோலை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது.

    துறைபோர் வீரகண்டன் சிந்தாத்திரன்
    காலதேவன் காங்கேயன்
    நரையாகி வெள்ளாகி முடவனெனும்
    பெண்பழச்சி குடியேழ்காண்
    வரையாக இவர்களையும் வகத்து வைத்து
    மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று
    திரையகழ் சூழ்புவியரசன் சேர்த்து வதை;து
    சீர்பாதமென்று செப்பினானே


    05. துறைநீலாவணைச் செப்பேடு
    துறைநீலாவணையில் சேமிக்கப்பட்ட செப்பேட்டில் வீரர்முனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயமும் சீர்பாதகுலம் தொடர்பான செய்திகளும் சீர்பாதக் குடிகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. (இலங்கை நூதனசாலையில் பணியாற்றிய திரு எம். டி. இராகவன் என்பவர் இச்செப்பேட்டினை நூதனசாலையில் சேமித்ததுடன் 24.10.1953ம் ஆண்டு Spolia Zeylancia Vol.27 Part-I எனும்   நூதனசாலை வெளியீட்டில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் குறிப்பிட்டுள்ளார்) இவ்வாறான துறைநீலாவணை செப்பேடு பின்வருமாறு அமைகின்றது. 

    பரத கண்டத்தில் பண்புடைய அரசராய்
    தரமுட னாண்ட சற்சன சோழன்
    தவப்பு தல்வியாக தரையினில் செனித்த
    நவமணி நேரும் மாருதப் புரவீக
    வல்லிதன் குதிரை வதனம் மாற

    எல்லையிற் தீர்த்தம் இந்திய முழுவதும்
    படிந்து திரிந்து பயனில தாக 
    வடிவேற் பெருமான் வைகிய கதிரை
    சென்றுதன் குறையை தீர்ப்பது முறையென
    மனறலங் குழலி வந்தனழ் லிலங்கை
    கந்தன் கழலடி காரிகை வணங்க
    விந்தை யாக விரும்பும் நாகநன்
    நாடதை கண்ணி நகுலநன் மனைவியின்

    மாடே தெற்காய் மல்கும் நதியில்
    முழுகிட வுந்தன் முற்பக வினையால்
    தழுவிய குதிரை சாயல் தீர்ந்து
    விளங்குவா யென்று மெல்லிய கனவில்
    உளமதுருக உவப்புடன் கண்;டு

    கீரி மலையை கிட்டியே செல்வி
    தீரினில் படிய நீத்தது மாமுகம்
    அச்செயல் தன்னை அறிந்திடு மாது
    மெச்சிட ஒற்றரை விரைவினிற் றான்
    உச்சிதமாக உவப்புட னனுப்பினள்

    அச்சம தில்லையென அரசன் விருப்புடன்
    கந்த னுருவக் கனகச் சிலைதனை
    விந்தைய தாக விரைவுட னனுப்ப
    கச்சாத் துறையின் கரையதிற் கொண்டு
    மெச்சிட ஒற்றர் விட்டனர் படகை
    அவ்விடந் தனில் ஆயிழை வந்து
    செவ்வை சேர் காங்கேயன் திருவு வந்தனை
    நகுல மலைக்கு நடந்தனள் கொண்டு

    தகைமைசேர் கோயில் தையலாள் இயற்றி
    கொடித்தம்பம் நட்டு குற்மில் விழாவை
    துடியிடை மங்கை சோர்வுறச் செய்து
    காரண நாமம் களறின ளப்போ

    பாரதி லென்னை பற்றி தீய
    மாமுக வடிவம் மாறின தாலே
    மாமுக னுறைவத மாவிட்ட புரம்
    காங்கேய னுருவது கரைசேர் இடம்
    காங்கேயன் துறையென கழறியே மீண்டு
    தாய் நாடேக தையலாள் இருந்தாள்


    அழகர் படவு அடங்கலும் அம்மை
    ஐங்கரக் கடவுட் ஆலயம் அமைத்து
    துங்க முடனே சொல்லருள் நிதியும்
    கிண்ணற யம்வெளி தரவை முன்மாரி
    தண்ணிய மல்வத்தை குளமும் வெளியெனும்
    செந்நெல் காணியும் சேயிழை யுதவி
    விழாக் கொண்டாடி விருப்புட னங்கு

    நாளும் திருப்பணி நலமுடன் புரிய
    ஆளும் செங்கோல் அரவிந் தம்கொடி
    விருதென வீந்து விருப்படன் தேவியின் 
    திருபெய ரென்றும் மறவாது வழங்க 
    சீர்பாதத் தோரென சீரிய நாமம் 
    போபெற வுவகைப் பிளம்போ டீந்தன்றி
    கோயி லூழியம் குறைவிலா தியற்ற 
    ஆயநான்னு மரபோர் ஆணையிற் படிந்து

    தூன்துதி வேலை தரணியிற் துதிக்க 
    புhன்மொழி யீந்து பத்தா வுடன்
    கண்டியினை அடைந்து கருணை ததும்ப
    அண்டிய பொருட்கள் அன்பாய் அனுப்பினாள்
    தாய்நாடு சென்று தவமணி யனையாள்
    ஆயதன் மாளிகை அமர்ந்தன ளாக
    அரசியின் கட்டளைக் கமைந்து நடக்க

    வரமுறு நால்வரும் வாதிட்டு வெருவ 
    தங்க வேலதை தண்ணளி யுடனே 
    மங்காச் சிந்தன் வலுவுடன் எடுத்து
    வடக்கை நோக்கி வந்தோர் இடத்தில் 
    திடமுடன் தில்லை மரத்தில் வைத்து 
    அங்குள பதியின் அமர்ந்தேர்க் குரைத்து


    துங்கமுட னவர்களை துணைவராய் கொண்டு
    கனகவேற் பணியை களிப்புட னெடுத்து 
    மனமுடன் கொத்து மண்டப மமைத்து
    தில்லைக் கந்தனென திருநம மிட்டு
    வல்லை மற்றிடம் வந்தோர் தமையழைத்து
    உரிமை உங்கட்கு உளதென் றேதினான்

    வரிபடர் வழியாய் வந்தநாள் முதலாய்
    கந்தனுக் கினிய கடிமலர் தூவலும்
    வந்தவர் பூசையை வழிகொடு நடத்தலும்
    திருவார் சிந்தனின் செம்மை வங்கிசமே

    சீர்பாததேவியின் பேரால் திகழு மரபினர்
    எல்லிடை யெண்ணி புதுவுயர் மரபோர்
    வாழும் போதினில் வகுத்தார் மரபோர்
    கேழும் யாரெனக் கிளத்து மிங்கு
    சுpந்தாத்திரன் சீரிய காலதேவன் காங்கேயன்
    நுரையாகி வெள்ளாகி முடவன் பழைச்சி 
    படையன் பரதேசி பாட்டு வாழி 
    உடைய னருளினன் உத்தம ஞானி
    ஆகுவா ரிவரை அடிப்படை யாக்கி 
    வாகு மருபுடன் வதியச் செய்தனர்

    நான்கு வருணமும் நலமுடன் பூனூல் 
    தான் மார்பி லணியும் தன்னை யுடையார்
    வில்வீர ரன்றி வேறோர் பூனூல் 
    இப்புவி தனில் இடாரென மதித்து 
    பூனூல் அணிந்த பொற்புறு அரசரை
    அந்நூல் அணிந்த அந்தண ரென்று 
    கூறுவ தன்றி குவலய மதில்
    அரசியின் குலமென் அழைப்பது சாலும்
    தரமுறு செங்கோல் தகைமைக் கொடி
    அரவிந்த மலரும் அமைந்த மையால்

    மங்கலப் பொருளாய் வழங்கிடு மிருகையும்
    துங்கமுடன் பெற்று துலங்கவே 
    அரசர்க் குரிய அறுதொழில் தவழ
    மரபுட னாற்றி வரவ தென்று 
    மன்னியே வாழும் சீர்பாதத் தோர்
    மனுகுலமென வகுத்தார்.

    மட்டக்களப்பிலே வாழ்கின்ற பல் வேறு சாதிகளின் மத்தியில் சீர்பாதகுலமும் சிறப்பானதொரு குலமாக பல்வேறுபட்ட நற்பண்புகளுடன் விளங்குகின்றது. சிறந்த வரலாற்றினையும் அதற்கான தெளிவான ஆதாரங்களையும் கொண்டுள்ள இக்குலமானது பரந்துபட்ட மக்கள் சமுதாயத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இவ்வாறான சீர்பாதகுலம் தொடர்பான தகவல்களை வழங்குகின்ற வகையில் சீர்பாதகுலச் செப்பேடுகள் காணப்படுகின்றன. இவை இந்நாட்டின் தொல் பொருள் சின்னங்களாக இலங்கை நூதனசாலைகளில் பேணப்பட்டு வருகின்றன. அத்தோடு காலத்துக்கு காலம் அது தொடர்பான நூல்கள், கட்டுரைகளும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    சீர்பாதகுல ஆராட்சியில் ஈடுபட்டு அதன்புகழை உலகெங்கும் பறை சாற்றிய பெருமை தமிழ் அறிஞர் அருள் செல்வநாயகம் அவர்களுக்குண்டு. சீர்பாதகுலம் பற்றிய கட்டுரை  அருள் செல்வநாயகத்தினால் எழுதப்பட்டு சென்னை மாநகரில் நடந்தேறிய 2வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முதல் நாள் அன்று அவரால் படிக்கப்பட்டு பல அறிஞர்களின் பாராட்டையும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பரிசையும் பெற்றுள்ளது. பின்னர் அக்கட்டுரை “சீர்பாதகுலவரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டமை    சீர்பாத மூகத்தினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. மேலும் அருள் செல்வநாயகத்தின் விருப்பினை நிறைவு செய்யுமுகமாக எம்.கருணைரெத்தினம் அவர்களால் குருமண்வெளியில் சீர்பாததேவி அறநெறிப்பாடசாலையில் சீர்பாததேவிக்கு சிலை வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
    குருமண்வெளியில் வைக்கப்பட்டுள்ள சீர்பாததேவி சிலை

    இவ்வாறான சிறப்புக்கள் பொருந்திய சீர்பாத சமுகத்தினரையும் அதன் புகழையும் மாசுபடுத்தும் நோக்கோடு சில எழுத்தாளர்கள் தங்களின் ஆய்வுகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவையாகவும் வரலாற்றிலிருந்து முரண்படுவனவாகவும் உள்ளன. சைவப் புலவர் எஸ். தில்லைநாதன் அவர்கள் தன்னுடைய மட்டக்களப்பில் இந்தக் கலாசாரம் என்கின்ற நூலில் சீர்பாதகுலம் பற்றி குறிப்பிடுகின்ற பகுதியிலே சீர்பாதர் தொடர்பான தவறான கருத்துக்களுக்கு மறுப்புக்களை ஆதாதரபூர்வமாக வெளியிட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
சீர்பாத சமூகத்தினர் மத்தியில் கண்ணகி வழிபாடு பிரதான வழிபாடாகவும், தொன்மையான வழிபாடாகவும் உள்ளது. கண்ணகி மதுரையை எரித்து. கயபாகு மன்னன் பத்தினி தெய்வத்திற்கு விழா எடுத்து சிங்கள மக்கள் “பத்தினி தெய்யோ” என வழிபடுவது இவையெல்லாம் ஆடி மாதத்திற்குரியவை. இதனைத்தவிர்த்து வைகாசி மாதத்திலேயே தழிழர்களுக்கு வழிபாடு செய்து வருகின்றனர். மண்ணுலகில் இருந்து கண்ணகியம்மன் விண்ணுலகம் சென்றதாக குளிர்த்திப் பாடல் கூறுகின்றது. ஆக வைகாசித்திங்களை(பூரணை) இறுதி நாளாகக் கொண்டு கோயில் திறப்பர் சில இடங்களில் திங்கள் நாள் என்ற அடிப்படையில் இறுதி நாளாகக் கொண்டாடுவர். உதாரணமாக துறைநீலாவணையில் பொதுவாக இச்சடங்கு வைகாசி மாதத்தில் நடைபெறுவதால் வைகாசிச்சடங்கு என்பர். 

 சீர்பாதக் குலத்தவர்கள் வாழுகின்ற , துறைநீலாவணை,வீரமுனை
 15ம் கிராமம், மகிழுர் போன்ற இடங்களில் கண்ணகி வழிபாடு நடைபெறுகின்றது. இங்கு கதவு திறப்பது பற்றி கோயில் நிருவாகத்தில் ஒரு கிழமைக்கு முன்பே அறிவித்து  ஊர்மக்கள் அவையில் கூடி சடங்கு பற்றி கலந்தாலோசிப்பார்கள் இது அவ்வாலயத்திலோ அல்லது வேறு ஆலயத்திலோ நடைபெறும் .


வைகாசி மாதப் பூரணையிலேயே அம்மன் குளிர்த்தி இடம்பெறும் குளிர்த்திச் சடங்கு “கதவு திறத்தல்” நிகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் சில கிராமங்களில் கதவு திறத்தல் சடங்கிற்கான சாப்பாடு முதலியன தலைமை வண்ணக்கர் வீட்டிலும் நடைபெறும் கதவு திறப்பதற்கு முன்பு கட்டாடியார் என்று அழைக்கப்படும் பூசகர் முழுகி “மாத்து” உடுத்தி ஊர் முழுவதும் புனிதமான தீர்த்தம் தெளித்து ஊர் காவல் பண்ணும் சடங்கினைச் செய்வார் இதன் பின்பே பூசைப் பொருட்களை தட்டத்தில் வைத்து கோயில் திறப்பையும் அதில் வைத்து பயபக்தியுடன் வெளிப்பூசை செய்வார். அப்போது மடையும் வைப்பார். சில கிராமங்களில் கோயில் வீதி  காவல் பண்ணி கதவுதிறக்கும் முறையும் உண்டு.

1. கட்டாடிகளும் பூசை முறைகளும் 
அம்மனுககு பூசை செய்பவர் கட்டாடியார் என அழைக்கப்படுவர். இவர் வெண்பட்டை இடுப்பிலே உடுத்தி பட்டுச்சால்வையினால் மார்பிலே ஏகாவடம் போட்டு பட்டுச்சால்வையிலே தலைப்பாகையும் கட்டிக் கொள்வார் கழுத்திலே உருத்திராக்க மாலையும் கையிலே சிலம்பும் அணிந்து மேனியெங்கும் திருநீறும் மஞ்சளும் பூசி பொட்டு இட்டு அம்மன் போலவே திகழ்வார் இடுப்பிலே வேப்பிலை சொருகியிருப்பார் இவர் கட்டாடியார் எனப்படுவார்.

2. உதவிக்கட்டாடியார் 
கட்டாடியாருக்கு உதவியாக உதவிக்கட்டாடியார் எனப்படும் உதவி செய்வோர் இருப்பர் இவர்கள் கோயில் நிருவாகிகளான வண்ணக்கர்களுடன் மடைவைத்தல் தொடக்கம் சகல கோயில் தொண்டுகளிலும் ஈடுபடுவர்.

3. சடங்கு வழிபாடு 
பந்ததி முறைப்படி செய்யப்படும் பூசை வழிபாடுகளில் சீர்பாத சமூகத்தினர் முக்கிய இடத்தை வகிக்கின்றனர். பலவகை பழங்களை நிவேதனமாக படைப்பர் இது மடை எனப்படும்.
வேப்பிலை கமுகம் பாளை தாமரைப்பூ முதலியவற்றைக் கொண்டு மடையை அலங்கரிப்பர் கற்பூர தீபம் ஏற்றிய பின்பு கதவு திறக்கப்படும் மந்திரம் இன்றி தீபாராதனை நடைபெறும் பூசகர் வாய்க்கு சீலை கட்டியே பூசை செய்வார்; அவரது கையில் இருக்கும் மணி ஒலிக்கும் அவர் உருவேறி ஆடிக்கொண்டே பூசை செய்வார் மாதர் ‘குரவை” ஒலி எழுப்புவர் அரோகரா சத்தம் உடுக்கு அடித்து உடுக்குச்சிந்து பாடுதல் சிலம்பு அம்மன் காய் கிலுக்குதல் ஆகியன பேரொலியாக ஒலிக்கப் பூசை நடைபெறும் பூசை முடிவுற்ற பின் உடுக்குச் சிந்து பாடப்படும் பூசை முடிவில் மக்களுக்கு திருநீறும் தீர்த்தமும் வழங்கப்படும் பத்தினி கோயில்களில் மஞ்சளை அரைத்து பொட்டிடுவர். மஞ்சளும் குங்குமமுமே உபயோகிப்பர் சந்தணம் உபயோகிப்பதில்லை

கிராம மக்கள் சேர்ந்து தோரணம் கட்டுவர் புதிதாக கம்புகள் வெட்டப்பட்டு விதி முறைப்படி திட்டமிடப்பட்டு அனுபவம் வாய்ந்தோரால் அழகாகக்கட்டப்படும். வேறு கிராமத்தில் இருந்து கட்டப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு ஏற்றப்படும் வழக்கமும் உண்டு. அங்கேயே கட்டப்பட்டு ஏற்றப்படும் நிகழ்ச்சியும் உண்டு. தோரணம் ஏற்றும் போது மடைவைத்து பூசை செய்து அம்மன் ஆலய முகப்பில் ஏற்றி வைக்கப்படும். 

கதவு திறந்து 3ம் நாள் அம்மன் ஊர்வலம் வருவது வழக்கமாக உள்ளது இதில் அம்மன் பல்லாக்கின் மீது வைத்து அலங்கரிக்கப்பட்டு மேள தாள வாத்தியங்கள் ஒலிக்க(சில ஊர்களில் பேண்டு வாத்தியங்களை கொண்டு இளைஞர்கள் நடனமாடிச்செல்வதும் உண்டு) அம்மன் ஊர்வலம் வரும் இதில் அவ்வூர் மக்கள் வளவு வாசலில் கும்பம் வைத்து அம்மனை வழிபடுவர் இவ்வாறு ஊர் சுற்றிய பின்னர் கோயிலை சென்றடையும்.  கதவு திறத்தல் முதலாக ஒவn;வாரு நாளும் மத்தியானம் இரவு என இருநேரம் மட்டுமே சடங்குகள் நடைபெறும். திருக்குளிர்த்திற்கு முன்பு கலியாண சடங்கு நடைபெறும் சில கிராமங்களில் கலியாணக் கால் வெட்டுதலுடனே  சடங்கு தொடங்குதலும் உண்டு.

பெரும் பாலான கோயில்களில் கலியாணக் கால் வெட்டுதல் நிகழ்வு குளிர்த்திக்கு முதல் நாளே இடம் பெறும் கட்டாடியார் பெண் போல சேலை உடுத்தி முக்காடிட்டு பறை மேளம் ஒலிக்க பெண்களின் குரலில்  “அரோகரா” என்று ஒலிக்க கலியாணக் கால் வெட்டும் இடத்திற்குச் செல்வார். முன்பே பார்த்து தீhமானித்த மரத்தடியிலே மடைவைத்து பூசை செய்யப்படும் பின்பு அம்மரம் கட்டாடியரால் வெட்டப்படும் பூவரச  மரம் அல்லது அரசமரம் போன்றவற்றில் கலியாணக்கால் வெட்டப்படும். வெட்டிக் கொண்டு திரும்பும் போது கட்டாடியார் உருவேறிய நிலையிலே ஓட்டமாக ஆலயம் செல்வார் 

கொண்டு வரப்பட்ட கல்யாணக் கால் மூலஸ்தானத்திற்கு முன் உள்ள கலியாண மண்டபத்தின் நடுவே இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறு மேடையில் நடப்பட்டு அலங்கரிக்கப்படும் அழகான சரிகைச் சேலையினால் அக்கலியாணக் கால் அலங்கரிக்கப்படும் பெண் போன்ற தோற்றம் தரும் வகையில் கலியாணக்கால் அலங்கரிக்கப்பட்டு பூசை நடைபெறும்.

அம்மனின் வரலாறு கூறும் ஏடுகள் உள்ளன. ஆலயத்திலேயே ஒரு புறத்தே பூசை தவிர்ந்த நேரங்களில் வரலாறு கூறும் ஏடு படித்தல் இடம் பெறும். மடைவைத்து பூசை செய்து முறைப்படி தொடக்கப்பட்ட இவ் வைபவம் தொடர்ந்து நடை பெறும். பக்தர்கள் பயபக்தியுடன் குழுமி இருந்து கேட்பர் கலியாண சடங்கின் போது அம்மனின் கலியாண ஏடு படித்தல் இடம் பெறும் கலியாணச் சடங்கு முடிவுற ஏடு படித்ததுடன் கலியாணச் சடங்கு நிறைவுறும். குளிர்த்தியின் போது ஏடு படிக்கப்படும் இதற்கென சோடிக்கப்பட்ட மண்டபத்திலயே அம்மனைக் கொண்டு வந்து தீர்த்தச் சட்டியின் மேல் அமர்த்தி குளிர்த்தி ஆடும் போது இந்த ஏடு படிக்கப்படும். இருவர் மாறிமாறிப் படிப்பர். சடங்குகளில் அம்மன் தொண்டாகவும் நேர்த்திக்கடனாகவும் அன்பர்கள் அதைச் செய்வர் நீராடி மாத்து உடுத்து பெண்கள் தலையிலே வேப்பிலை சூடி, மடி கொய்து சீலை உடுத்துவர். அம்மடியிலே தம் வீட்டிலிருந்து சிறிது நெல்லும் வேப்பம் பத்திரத்தையும் போட்டு வீடுவீடாகச் சென்று மடிப்பிச்சை எடுப்பர் “கண்ணகி அம்மன் பேராலே மடிப்பிச்சை போடு” என்று கேட்டுப் பெறும் நெல்லை அம்மன் ஆலயத்திலே கொடுப்பர். மடிப்பிச்சை நெல், நேர்த்திக்கடன் நெல் என்பன ஆலய வீதியிலே காயவிடப்பட்டு உரல் நாட்டி குற்றப்படும் குளிர்த்தி பூசை அன்று பின்நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறும் பெண்கள் கூடி குற்றிப்புடைத்து, அரிசி ஆக்கிக் கொடுப்பர். இந்நிகழ்ச்சியும் மடைவைத்து பூசை செய்து ஆரம்பிக்கப்படும்..
மேலே கூறியவாறு குற்றியெடுக்கப்பட்ட அரிசியினை அம்மனுக்காக பொங்கும் நிகழ்வே இது. விநாசகப்பானை ஏற்றும் நிகழ்வு குளிர்த்திச் சடங்கின் போது முக்கியமான ஒரு வைபவமாகும் புதிதாக வாங்கிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட மண் பானையிலே பொங்கப்படும் ஆலய முன்றலிலே புதிதாக அடுப்பு மூட்டி மடைவைத்து தீபாராதனை செய்து பானைகளை அடுப்பில் ஏற்றுவர். மூன்று பானைகள் வைத்தல் மரபு பானையில் பால் பொங்கும் வேளையில் நடுவிலுள்ள பால் பானையை மூலஸ்தானத்த்pற்கு கொண்டு போய் அம்மனுடைய மடையில் முக்கியமாக வைப்பர் ஆண்டு தோறும் விநாசகப்பானை புதிதாக வாங்கப்படும்.

மாட்டுப்பட்டி உள்ள கிராமங்களில் மக்கள் பாலைக் கோவிலுக்கு கொடுப்பர் ஆலயத்தில் இதற்கென பெரிய பானைகளும் அண்டாக்களும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் தமது பட்டியின் பாலைக் கொண்டு வந்து ஊற்றிப்  போவார்கள் இப்பாலைக் கொண்டே விநாசகப்பானை பொங்கப்படும். நேர்த்திக்கடனில் பொங்கும் எல்லோருக்குமே இப்பால் பகிர்ந்தளிக்கப்படும் இறுதியில் எல்லோரினதும் பானையிலுமே மூன்று அகப்பை அள்ளப்பட்டு அம்மனுக்கு படைக்கப்படும்; இதில் பொதிந்துள்ள சமத்துவக் கருத்து கவனத்தில் கொள்ளதக்கது சங்க காலத்தில் பக்தர்கள் பலவிதமான நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர் இவ் மரபு சீர்பாத சமூகத்தினரிடையும் காணக்கூடியதாகவுள்ளது தீச்சட்டி ஏற்றல், மடிப்பிச்சை எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், மடைப்பெட்டி கொடுத்தல், பிள்ளை விற்றல், அடையாளம் கொடுத்தல் என அவை பலவிதமாக அமையும்.

காவடி பால் காவடி, முள்ளுக்காவடி, பறவைக்காவடி என பல வகைப்படும். சிறுவர்கள் பால் காவடி எடுப்பர் முழுகிக் காவியுடுத்து உருத்திராட்ச மாலை அணிந்து தயாரானதும் பெரியவர்கள் பக்திப்பாடல்களை பாடி உடுகு அடித்து உரு ஏற்றுவர் பின் காவடியை தோளில் வைத்து அரோகரா சத்தத்துடன் பலர் தொடர்ந்து வர காவடி ஆலயத்திற்குள் செல்லும். இவ்விதமே முள்ளுக்காவடி எடுப்பர். முதுகிலே பல முட்கள் குற்றி எடுக்கப்படும் ஒருவர் செடிப் பிடித்து இழுக்க காவடி தாங்கியவர் தாளத்திற்கேற்ப ஆடுவர் தனியேயும் கூட்டமாகவும் மத்தாளம் சல்லரியுடன் தாளத்திற்கேற்ப ஆடியபடி காவடி ஆலயத்தை அடையும். இவ்விதமே பறவைக்காவடி போன்றவையும் எடுப்பவரின் உடலை வருத்துவனவாய் இருக்கும்; பறவைக்காவடி தேரில் தொங்குவதாயும் அமையும். அலகு குத்துபவரின் வாயில் ஊசி ஏற்றி அலகினைப் பொருத்துவர் மந்திர உச்சாடனத்துடன் அலகு குத்தும் போது பக்தர் உருவேறிய நிலையில் காணப்படுவார். பெரும்பாலும் பெண்களே அலகு குத்துவதுண்டு அலகு குத்திய பெண்கள் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் செல்வர்.

காவியுடுத்தி உருத்திராட்சம் அணிந்து கையில் தேங்காயுடன் பக்தர்கள் அம்மன் ஆலயத்தினை சுற்றிவருவர் இது அங்கப்பிரதட்சணம் எனப்படும். இவர்கள் எல்லோருமே காலைமுதல் உபவாசம் இருந்து நேர்த்தி முடிவுற்ற பின்னரே இளநீர் அருந்துவர். நேர்த்திக்கடன்களில் இதுவும் ஒன்று பெற்றோர் தமது சிறு குழந்தைகளை பூசாரியிடம் கொடுத்து விலை கூறச் செய்து பின்பு தாமே அக்குழந்தையை பெற்றுக் கொண்டு காணிக்கை செலுத்துவர். ஆலயத்திலே அடையாளப் பொருட்கள் விற்கப்படும் குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்குரிய பொருட்கள் வெள்ளி, தங்கம் போன்றவற்றிலும் செய்து கொடுக்கப்படும் ஆலய முகப்பிலே அடையாளப் பொருட்கள் பாக்கு, பழம், வெற்றிலை போன்றவற்றுடன் வழங்கப்படும். வழங்கிய பின் பெட்டியில் வைத்து வெள்ளைத்துணியால் மூடி தலையில் வைத்து கோயிலை வலம் வந்து கொடுத்தவுடன் தீத்தம் தெளிர்த்து பெற்றுக் கொள்ளும் பூசகர் விபூதி பிரசாதம் கொடுப்பர் இவைதவிர ஆடு, மாடு, கோழி, தென்னங்கன்று, கமுகங்கன்று போன்ற பலவும் நேர்த்திக்கடனாக கொடுக்கப்படும்.





மண்டூர் முருகன் ஆலயம்

மட்டக்களப்பு பிரதேசத்தில் நீண்டபாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் அதனோடு கூடிய பண்பாட்டுக் கோலங்களையும் இயற்கையோடு இயைந்தவழிபாட்டையும் கட்டிக்காக்கின்ற பெருமை மண்டூர் ஆலயத்திற்கே உண்டு. இதன் அடிப்படைமாறாதிருப்பது சிறப்பானதொன்று. இதே சிறப்பியல்புகள் இப்பிரதேசத்திற்கு அப்பால் கதிர்காமத்திலும் பேணப்படுகின்றது. மட்;டக்களப்பின் தென்கோடியில் சுமார் 30 மைல் தொலைவில் பரந்த வாவிக்கரையில் அமைந்துள்ள ஊரே மண்டூராகும். பண்டைய நாட்களில் இருந்து தில்லமைரங்கள் இக்கோயிற் பகுதியில் அதிகமாக இருந்தமையினாலும் கவிஞர்களும், பக்தர்களும் இவ்விடத்ததை தில்லை மண்டூர் என்றே வழங்குகின்றனர்.கிழக்கிலங்கையில் மிகவும் பழமையும், பிரசித்தமாகவும் இருந்த முருகன் கோயில்கள் திருப்படைக் கோயில்கள் என்றும் அழைக்கப் பெற்றன. பண்டைய அரசனின் மதிப்பு.மானியங்களும், சீர்வரிசைகளும், நிருவாக அமைப்பும் பெற்ற கோயிலே இது. அதனால் இதனை தேசத்துக்கோயில் என்றும் அழைப்பர். இப்புகழ்மிக்க கோயிலின் தோற்றம் சீர்பாதகுலத்தோடு தொடர்புடையது.

சீர்பாததேவியும் அவருடன் வந்தவர்களும் வீரமுனையலே வந்திறங்கி விநாயகருக்கு ஆலயம் அமைத்த போது அவர்கள் தங்களுடன் பாதுகாப்பிற்காக கொண்டு வந்த வேலினையும் அங்கு வைத்து வழிபட்டனர். இவ்வாறு வழிபட்டு வந்த பாலப்பகுதியில் சீர்பாத குலத்தவரிடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கிடமிருந்து பிரிந்த சிந்தன் அங்கிருந்த தங்க வேலினை எடுத்து வந்து  மண்டூர் தில்லை மரத்தடியில் மறைத்து விட்டு துறைநீலாவணையில் வந்து வாழ்ந்தான் இதனால் சிந்தாத்திரன் குடியினர் அதிகமாக வாழும் இடமாக  துறைநீலாவணை கிராமம் விளங்குகின்றது.

தில்லைமரத்தடியில் வேலினைக் கண்ட அப்பகுதி ஆதிவேடர்கள்(நாதனை வேடுவர்கள்) கொத்து பந்தல் அமைத்து வழிபடப்பட்டனர்.. இதன் பின்னர் சிந்தன்  தான் கொண்டு வந்த தங்கவேல் அங்கு கொத்துப்பந்தல் அமைக்கப்பட்டு வழிபடுவதை அறிந்து தன் உறவினர்களோடு சேர்ந்து அதற்கு பூசை செய்தான். ஆகையினால்தான் இன்று சிந்தாத்திரன் குடிவழிவந்த மரபினரே பெரிய கப்புகனராக இருந்து பூசை செய்து வருகின்றனர். இதில் உதவிக் கப்புகனராக வேடர்களைக் கொண்டு; பூசை செய்யப்படுகின்றது.

பின்னர் இவர்களோடு குருமண்வெளி, கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு போன்ற நான்கு ஊர்மக்களும் இணைந்து அதற்கு தில்லைமண்டூர் முருகன் ஆலயம் என நாமம் சூட்டி வழிபட்டனர். மட்டக்களப்பு தழிழகத்திலே கோயில் வழிபாட்டோடும் நடைமுறைகளோடும் வேளாளர் தொடர்புடையவர்களாக இருந்தனர் இதனால் 20 வேளாளர்கள் சாமி துக்குவதற்குக் கொண்டுவந்தனர் இதில் 20 வேளாளருக்கும் ஒரு தலைவர் தெரிவு செய்யப்பட்டனர். இத்தகைய வழிவந்தோரே வண்ணக்கராகக் காணப்படுகின்றனர். இவர்கள் இன்று வேளாளகுலத்தின் கவுத்தன் குடியைச் சேர்ந்தவர்களாக உள்ளதோடு வண்ணக்கர் தெரிவு செய்வதில் போட்டி ஏற்படுவதால் நான்கு கணக்கப்பிள்ளைகளும் தங்கள் விருப்பத்தின் பேரில் வண்ணக்கர் தெரிவு செய்யும் உரிமையுடையவர்களாக இருக்கின்றனர். 

நிருவாகத்தில் மட்டுமன்றி திருவிழாக்காலங்களில் நடைபெறும் பூசைகளிலும் சீர்பாத குலத்தவர் தொடர்புபட்டிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் மண்டூர் ஆவணிமாதப் பூரணையில் அன்று தீர்த்தத் திருவிழாவும் அதற்கு முன்னருள்ள இருபது நாட்களும் திருவிழாக்கள் நடக்கத்தக்கதாக, கதிர்காமத்தீர்த்தம் கழித்து 10ம் நாள் (ஆடி மாதப் பூரணையின் பின் வரும் 10ம் நாள்) மண்டூர் முருகன் ஆலயத்தின் கொடியேற்றம் நடைபெறும். 

இக்கொடியேற்றம் வெல்லாவெளி பிரதேச செயலாளர், நான்கு வண்ணக்கர் மாரிடம் சம்மதம் கேட்டபின்னரே நடைபெறுவது வழக்கமாகும். 11ம் திருவிழாத் தொடக்கம் 20ம் திருவிழாக்கள் வரை சுற்று வட்டத் திருவிழாக்கள் காலையும், மாலையும் நடைபெறும். இத்திருவிழாக்களில் அதிகமான திருவிழாக்கள் சீர்பாத குலத்தினரையே சார்ந்துள்ளது.

11ம் நாள் திருவிழாவின் போது சீர்பாத குலத்தவரான ஞானி குடிமக்கள் புஸ்பவிமான புண்ணியதான சங்கர்ப்பம் செய்யும் உரிமையுடையவர்காளகவுள்ளனர். 12ம் திருவிழா குருமண்வெளி, வீரமுனை, மண்டூர் சீர்பாதகுலத்தவர்களால்; நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் 13ம், 15ம், நாட்களில் துறைநீலாவணைமக்களும், 14, 16ம் திருவிழா குருமண்வெளி மக்களாலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மற்றும் தீர்த்த உற்சவத்தின் பிறகு தீர்த்தக்கரையில் நானகு ஊர் மக்களும் கௌரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மஞ்சட்காப்பு மாலையும், பட்டு தீர்த்தமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகி;ன்றனர். இதேபோன்று காளஞ்சி  வழங்கும் போதும் நடைபெறுகின்றது. இது தவிர கந்த சஸ்டிவிரதத்தில் படிக்கப்படும். திருச்செந்தூர் புராணம்  ஏடுவளங்கும் முறை அதாவது படிக்கும் முறையும் பொருள் சொல்லும் முறையும் ஒரு வருடத்திற்கு ஒரு கிராமம் என்றவகையிலும். சீர்பாத குலமக்கள் உரிமையுடையவர்;களாகின்றனர். இதில் இடம்பெறும் கல்யாணப்பூசை சீர்hபத குலத்தவருக்கே உரியது. இவையனைத்தும் மண்டூர் முருகன் ஆலயம் சீர்பாத குலமக்களோடு உள்ள தொடர்புகளை காட்டி நிற்பது சீர்பாதகுலத்தவருக்கும் மண்டூர் முருகன் ஆலயத்திற்குமான மிக நெருக்கமான தொடர்பினை சுட்டி நிற்கின்றது. 



சீர்பாதர் சமூகத்தவரின் கலை அம்சங்கள்

கலையம்சங்கள் பற்றி பார்க்குமிடத்து கரகாட்டக்கலை சீபாதகுலத்தவர்களிடையே அருகிவருகின்ற நிலையிலே உள்ளது. மாலையர் கட்டைச் சேர்ந்த கந்தையா சோமசுந்தரம் எனபவர் சீர்பாதக்குலத்;தவர் மட்டுமன்றி வடகிழக்கே அறியும் வண்ணம் கரகாட்டத்தில் புகழ் போனவர். இவரது கரகாட்டமானது மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது நீண்ட காலமாக கரகாட்டக்கலைஞராக வலம் வரும் இவர் இந்து கலாசார பண்பாட்டு திணைக்களகத்தினால் நடாத்தப்பட்ட கரக நிகழ்வில் கலந்து கொண்டு பாராட்டைப் பெற்றதோடு இன்று கரகாட்டம் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கலைஞரும் கூடவே. இவரோடு துறைநீலாவணை மூத்தம்பி கண்ணப்பன், க.பரமானந்தம், பொன்னையா போன்றவர்கள் கரகாட்டக்கலைகளில் சிறப்புமிக்கவர்களாவர்.

நாடகம் கலைக்கரசு, நாட்டின் நாகரிகக் கண்னாடி என்ற அழைக்கப்படுகின்ற நாடகம் பாமரமக்களின் பல்கலை உணர்ச்சியைத் தூண்டி விட்டு உள்ளத்தில்; புதைந்து கிடக்கும் அன்பையும், அறிவையும், துய்மையையும் வெளிப்படுத்தி மக்களை பண்படுத்தும் மகத்தான கலை ஆகும். நாடு - அகம் - நாடகம், நாட்டை கொண்டது நாடகம். அதாவது நாட்டின் சென்றகாலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால் நாடகம் எனப் பெயர் பெற்றுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால் உலக நிகழ்வுகளைக் காட்டும் கண்ணாடி எனலாம். மட்டக்களப்பில் இன்று நாடகக்கலை வளர்ச்சியடைந்து வருவதைப் போன்று சீபாதகுலத்தவரும் நாடகக்கலையில் வளர்சிசயடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

சீபாதக்குலத்தின் நாடகக்கலை வளர்ச்சியில் துறைநீலாவணைக் கிராமம் முக்கிய இடமாக இருந்து வருகின்றது 1960ம் ஆண்டு காலத்திலிருந்தே இக்கலையின் வளர்ச்சியை கண்டு கொள்ளத்தக்கதாக உள்ளது அதனில் முதலில் குறிப்பிட வேண்டியவை. கலாபூசணம் எஸ்.தினகரம் பிள்ளை அவர்களினால்
“மறுமலர்ச்சி நாடக மன்றம்” பல நாடகங்களை எழுதி நடித்தமை குறிப்பிடத்தக்கது இதன் பின் இராசசிங்கத்தின் நாடக மன்றம். மற்றும் நா.வரதராசா அவர்களின் “நீலா நாடக மன்றம், சி.கனகசபையின் “முரசொலி நாடக மன்றம்” போன்றவை முக்கியமானவை. 

கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் வசந்தன்கூத்து, பறைமேளக் கூத்து, தென்மோடிக் கூத்து, வடமோடிக் கூத்து போன்றவை நாடகவடிவில் ஆடப்படுபவையாகும். இவை அன்றைய காலங்களில் சிறப்பு வளர்ச்சியடைந்து இன்று நவீன மயமாதலினால் இக்கூத்துக்கள் மருவிக் கொண்டு செல்வதனை நாம் காணக் கூடியதகவுள்ளது. ஆடலும் பாடலும் சேர்ந்து பார்ப்போருக்கும், கேட்போருக்கும் இன்பம் ஊட்டுபவனவாக இக் கூத்துக்கள் இன்று கிராமமட்டங்களிலே காணப்படுகின்றது. கூத்து என்பது ஆடலும், இசையும் சேர்ந்து மக்கள் நிலையில் வைத்து பயிலப்படும் ஒரு கலையாகும். இக்கலை சீர்பாத குலமக்களிடையே சிறப்பாக பேணப்பட்டு, வளர்ச்சியடைந்து வருகின்றதை அறியக் கூடியதாக இருக்கின்றது. 

அதிகமாக சீர்பாத குலத்தவரிடையே ஆடப்பட்டுவந்த கூத்து தென்மோடிக் கூத்தாகும். தென்மோடியில் உடை இலேசானவையாகும். மணிகள், மாலைகள் பூக்கள், பொருத்தியவை முடி. இதில் நடிகர்கள் இடப்பக்கமா சுற்றி ஆடுவார்கள.; வடமோடிக் கூத்தையோ தென்மோடிக் கூத்தையோ எடுத்துக் கொண்டால் இவை அண்ணாவியாரால் ஏதாவது ஒரு கதையை அதாவது மகாபாரதம், இராமாயணம் போன்ற கதைகளை பாட்டாக எழுதி அதற்கு மெட்டு அமைத்தே பாடப்படுகின்றது. இங்கு அண்ணாவியார் கூத்தின் இயக்குனராகக் காணப்படுவார். சல்லாரியை (ஒருவகைத்தாளம்) கையில் கொண்டு கூத்தைப் பழக்குவார். வடமொடிக் கூத்தோ, தென்மோடிக் கூத்தோ எதுவாயிலும். சிறப்பாக அரங்கேற்றம் பெறுவதற்கு முக்கி காரண கர்த்தா  அண்ணாவியாரே. இவர் பல கூத்துக்களை ஆடி அனுபவம் உள்ளவரபகவும் அல்லது பல கூத்துக்களைப் பாடிபழக்கியவராகவும் நன்கு பாடக் கூடியவராகவும் விளங்குவார் இவர் ஏதாவது ஒருநாடகத்தமிழை தேர்ந்தெடுத்து அதனை அவ்வூரிலுள்ள கூத்தாடுதலுக்கு விருப்பமுள்ளவர்களைக் கொண்டு முதல் நாள் நிகழ்சியாக சட்டங்கொடுத்தல் (சட்டம் என்பது ஓலைச்சட்டம்) நடைபெறும்.  

சட்டங் கொடுத்தல் என்பது. நாடகத்தில் வரும்பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் அப்பாத்திரத்திற்குரிய பாடல்களை எழுதிக்கொடுத்தலாகும். பெண் பாத்திரத்திற்கு பொருத்த மான ஆண்களே தேர்ந்தெடுக்கப்டுவர். இதில் குரல் வளம் நோக்கப்படும் இந் நிகழ்ச்சி ஒரு சமயச் சடங்குடன் ஆரம்பமாகும். கூத்து பழக்குவதற்கு அமைக்கப்பட்ட களரியில் (கூத்தாடும் அரங்கு) வெற்றிலை, பாக்கு, பழம், மலர், தேங்காய் முதலியவற்றைக் கொண்டு மடைவைத்து (நிறை குடம்) கற்பூரம் கொழுத்தி தேவாரம் பாடி பின்னரே சட்டங் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெறும். அண்ணாவியாரைக் கூத்தாடுபவர்கள் தம் குருவாக மதித்து அடங்கி நடப்பர். அண்ணாவியார் கூத்தைப்பழக்கி அரங்கேற்றம் செய்யும்வரை அவருக்கு வேதனம் எவ்வளவு எனப் பொருந்தி தவணை முறையில் அதனைக் கொடுப்பர். அத்தோடு ஒவ்வொரு களரி பழகும் போதும் குடிப்பதற்கு மது முதலானவையும் நடிகர்களது செலவில் வாங்கிக் கொடுக்கப்படும். அத்தோடு அண்ணாவியாரை சந்தோசப்படுத்;துவதற்காக வேட்டி சால்வை என்பனவும் வெகுமதியாக வழங்குவர். அடுத்து இடம் பெறுபவர் மத்தாளம் என்னும் கருவியை அடிப்பவர். மத்தாளத்திலும,; சல்லாரியிலும் அடிக்கப்படும் தாளத்திற்கு ஏற்ப கூத்தாடுபவர்களின் ஆட்டம் இடம் பெறும். மத்தளத்தில் இருந்து எழும் ஓசை பார்ப்போருக்கும் கேட்போருக்கும். இனிய விருந்தாக அமையும். போர் முதலிய காட்சியின் போது மத்தளத்தின் ஒலிவேகமும், தாளம் பிசகாமையும் மத்தளம் அடிப்பவரின் திறமையைப் பொறுத்தே அமையும்.;. மாலை தொடக்கம் விடியும்வரை நடைபெறும் கூத்து நிகழ்ச்சியில் இரண்டு மூன்று போர் மாறிமாறி மத்தாளம் அடிப்பதைக் காணக் கூடியதாக இருக்கும். ஏடுபடிப்பவர் அடுதது குறிப்பிடத்தக்கவர்.

இனி நடை முறையமைப்பு, களரி என்பனவற்றின் சிறப்பு பற்றி நோக்கின் கூத்தாடுபவர்களைக் கொண்டு நான்கு ஐந்து களரி பழக்கிய பின்னர் சதங்கை அணிவிழா இடம்பெறும். இதில் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் சதங்கைகள் அணியப்படும். இதனை ஒரு விழாவாகக் கொண்டாடுவர். உறவினர் நண்பர்களுக்கெல்லாம் அறிவித்து சலங்கையணிவிழா நடைபெறும். உறவினர்களும், நண்பர்களும் சென்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். மாலை கட்டி அல்லது மாலை அணிவித்து அல்லது வேறு சன்மானம் வழங்கி அன்பைக் காட்டுவார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு மூன்று களரி பழகிய பின்னர் அடுக்குப்பார்த்தல் நிகழ்ச்சி இடம் பெறும். அதனைத் தொடாந்து நல்லதொரு தினத்தை தேர்ந்தெடுத்து தமது ஊரிலுள்ள கோயில் முன்றலில் அல்லது பொது இடத்தில் அரங்கேற்ற விழாவைச் செய்வர். இதனை மிகவும் சிறப்பாகவும் விமர்pசையாவும் செய்வர்.  கூத்தின் பெயரினைக் கொண்டதாக  அழைப்பிதழ் அச்சிட்டு தம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வளங்குவர். கூத்தாடும் களரியை வட்டவடிவமாக அமைத்து வண்ணச் சேலைகள் கொண்டு மேற்கட்டி அமைத்து சருகைக் கடதாசிகளைக் கொண்டு Fshpia அலங்கரித்து தூண்கள் தோறும் எண்ணெய் விளக்கு கொண்டு தீபமேற்றி பெரும் விழாவாக இடம்பெறும்.
சீர்பாத குலத்தவர்களில் இன்று கூத்தாடப்படும் இடங்களாக கரையாக்கந்தீவு, இலுப்பைக்குளம், மற்றும் 14ம், 15ம் கிராமங்களையும் குறிப்பிடலாம். அந்த வகையில் கரையாக்கந்தீவில் க.பரமானந்தம் அண்ணாவியார் புகழ் மிக்கவர். இவர் இராமாயனம், மகாபாரதம், (17ம்,18ம்) கூத்து, வள்ளி திருமணம் என்பன புகழ் பெற்றவை. இவரோடு இணைந்து ச.சுந்தரலிங்கம், சிங்கராசா என்போரும் சேர்ந்து பல கூத்துக்களை அரங்கேற்றி பல ஊர்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இலுப்பைக் குளத்தைச் சேர்ந்த த. அழகையா அண்ணாவியார்pன். “சீதையின் சோகம்”  “நீதி எங்கே”  போன்ற கூத்துக்கள் புகழ் மிக்கவை. (இக் கூத்து வட கிழக்கு கலாசார பேரவையின் பரிசு பெற்றது). மேலும் சீனித்தம்பி அண்ணாவியார் கூத்தில் புகழ்மிக்கவர். இவர் முன்னாள் அமைச்சர் இராசதுரையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இவ்வாறாக கலை வளர்ச்சியில் சீர்பாதகுல கலைஞர்கள் சிறப்பான இடத்தினை பெறுகின்றனர். 



சீர்பாத குலத்தவரின் பிற அம்சங்கள்

மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் சமுக அமைப்பின் உருவத்தினை உருவாக்கிக் கொள்கின்றனர் அது ஒருசங்கமாகவோ அல்லது குழுவாகவோ அல்லது நில அமைப்புக்களாகவோ இருக்கலாம். இவை சமூகம் இயங்குவதற்கான கருவிகளாகும. இதனால்தான் சமூக அமைப்பும் அதன் செயற்பாடும் ஏதோ ஒரு வகையான சமநிலையைக் கொண்ட சமுகம் என்பர். சமூக அமைப்பின் அம்சங்களை குடும்பம், திருமணம், பொருளாதாரம் (தொழில்), வருமானம், கல்வி, அரச பங்கேற்பு, நிருவாகம் போன்ற பல அமைப்புக்களை நோக்க வேண்டியுள்ளது இவ்வாறான அம்சங்களே ஒரு சமூகக் கட்டமைப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமயம்
மேலும் சீர்பாத குலத்தவர்கள் “பசுவை” தெய்வமாக வழிபட்டவர்களாகவும் அதிக கால்நடைகளை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர். இவர்கள் சோழ மரபினர்கள் ஆகையால்; அதிகமாக பசுக்கள் வளர்கின்றமை மரபாகின்றது. இங்கு பசுவுக்கென்று தனியான வழிபாட்டு முறைகளும்(பட்டிப் பொங்கல்) உள்ளன. 
   
சீர்பாத சமூகத்தினர் மிகவும் பக்தியுடையவர்களாகவும் வெளிப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. இது அவர்களது வரலாற்றோடு தொடபுடையதாகவும் உள்ளது இவர்கள் கோவிலுக்காக அதிக சேவைகள் செய்பவர்களாகவும், நேர்;த்திக்கடன் நிறைவேறறுபவர்களாகவும் உள்ளனர். அத்தோடு சீர்பாதகுலத்தவர்கள் வாழும் இடங்களில் மூன்று அல்லது ஐந்திற்கு மேற்பட்ட ஆலயங்கள் உள்ளதும் அதிலும் பிள்ளையார் வழிபாட்டோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்களாகவும் உள்ளனர்.

திருமணம்
மனித இனம் தன்பால் உந்துதலை ஒரு நிறுவன அமைப்பிற்குள் நிறைவு செய்ய ஏற்படுத்திய முறையே திருமணமாகும். உயர்பாலூட்டிகளிடமும் பிற கீழின விலங்குகளிடமும் பாலுறவு ஒரு உயிரியில் செயலாக மட்டுமே நிகழ்கின்றது. ஆனால் மனிதர்கள் சமூதாய- பன்பாட்டு விலங்காதலால் அவ்வுயிரியல் செயலை “திருமணம்” என்னும் நிறுவனச் செயலாக்கி அவர்கள் தம் உள- உயிரியல் உந்துதல்களை நிறைவு செய்து கொள்கின்றனர்;. சமூதாயம், பண்பாடு ஆகிய இரண்டும் மனிதன் அவனது வாழ்வியல் தேவைகளை ஈடுசெய்வதற்காக ஏற்படுத்திக் கொண்ட கருவியே. அதனால்தான் இடம் ,காலம், சூழலுக்கு ஏற்ப அக்கருவியை தன் விருப்பம் போல் இயக்கிக் கொள்கின்றான். அதனால் அக்கருவியின் பயன் தன்மை பல வடிவங்களாகக் காணப்படுகின்றது. பண்பாடு என்னும் அமைப்பும் (கருவி) பலவடிவங்களில் மனித சமூதாயத்தில் செயல்படுகின்றது. மனித விருப்பத்தால் ஏற்பட்ட இந்த ஒவ்வொரு வடிவத்திற்கென்றும் தனித்தனியான விதிமுறைகள், செயல் தன்மைகள், பண்பாடுகள் ஏற்பட்டன. (பக்தவத்சலபாரதி. 1992;: 378 ) 

ஆண் ஒரு குடியிலும் பெண் வேறு குடியிலுமாக அமைந்த சம்பந்தமே இங்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட திருமண சம்பந்தமாகும். சகோதரனின் மகனோ அல்லது மகளோ சகோதரியின் மகளையோ அல்லது மகனையோ திருமணம் செய்வதையே ஏற்றுக்  கொள்ளப்பட்ட சமூகக் கொள்கையாக அமைந்துவந்தது. ஆனால் இன்று பெற்றோர் உடன்பிறந்தவர்களை திருமணம் செய்வதால் அங்கவீனமான குழந்தைகள் பிறப்பதாக கருதி, இம்முறை படித்தவர்களிடம்குறைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு வேறுகுலத்தவரிடையே சென்று திருமணம் புரிவதைவிட இக்குலத்தில்திருமணம் செய்வது சிறப்பானதாக கருதுகின்றனர். திருமணம் என்பதற்கு கலியாணம், கண்னாலம், வதுவை, மணவணி, மணவினை, விவாகம் என பல பெயர்களும் உள்ளன சீர்பாத குல மக்களின் திருமண சம்பந்தமானது பின்வருமாறு அமைந்து விடுகின்றது 
                                    1. பெற்றேர்ர் சாணைக்குறியிடுவதன் மூலம் சாணைத்திருமணம் 
                                    2. பெற்றோர் தேர்ந்தெடுப்பதன் மூலம் பேச்சுத்திருமணம் 
                                    3. ஆணும் பெண்னும் தாங்களாகவே விரும்புவதன் மூலம் காதல் திருமணம் என்பனவாகும்.

குழந்தையை பிரசவிக்கும் வேளையில் பிறந்த குழந்தையை கழுவிய் பின்னர் உடனிருந்தும் உதவிபுரியும் மச்சாள் இந்நதப்பிள்ளைக்கு எனது இன்ன மகனே மணமகனாவான் எனக் கூறி பிள்ளையின் வயிற்றின் மீது மடித்த சீலைத் துண்டொன்றை போடுவாள் குழந்தையின் உபயோகத்திற்கு பயன் படும் துணிகளை சாணை என்னும் பெயரால் வழங்குவது வழக்கு. அவ்வகையில் குழந்தையின் மீது போடப்பெற்ற  சீலையும் சாணையாகின்றது இதுவே சாணைக்குறியென்று அழைக்கப்பட்டது. இவ்வாறு சாணைக்குறி மூலம் தீர்மாணிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் வளர்ந்து உரிய பருவம் அடைந்நததும் இவர்களுக்கு திருமணம் நடாத்தி வைக்கப்படுகின்றது. இவ்வாறு சாணைக்குறியிடுவதன் மூலம் ஏற்படும் திருமண வாழ்க்;கை தற்காலத்தில் மறைந்து செல்வதை காணக்கூடியதாகவும் உள்ள்ளது. ஆணும் பெண்னும் ஒருவரையொருவர் கருத்தொருமித்து ஆதரவு பெற்று திருமணம் செய்வர் இத்திருமணம் பெற்றார் விருப்பத்துடனும் அன்றேல் பெற்றார் விருப்பிமின்றியும் நடை பெறலாம். 

தற்காலத்தில் சோதிடப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதே பெருவழக்காக உள்ளது திருமணப் பொருத்தம் பார்த்தல் என்பது ஆணினதும் பெண்ணினதும் பிறந்த சோதிடக் குறிப்புகளைக் கொண்டு சோதிடர் நிபுணர்த்துவம் மூலமாக பொருத்தம் பார்த்தல். அப்பொருத்தங்கள் பதினான்காகும் இருந்தாலும் பெரும்பான்மை பத்துப் பொருத்தங்களே உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இவைகளும் கிரகப் பொருத்தத்துடன் நட்சத்திரப, பொருத்தம், கணப்பொருத்தம், இரட்சிப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம் ஆகிய ஐந்தும் முக்கியமானதாகும் இவை ஐந்திலும் யோனிப் பொருத்தம் இரட்சிப்பொருத்தத்துடன் சேர்ந்து  பொருந்த வேண்டும் இவ்வாறு பார்க்கப்பட்ட பொருத்தம் பெரும் பான்மை பொருந்துமாயின் மட்டுமே திருமணப் பேச்சுவார்த்தை தொடரப்படும்.

இரு பகுதியினரிடையேயும் பொருத்தம் திருப்தியாக அமைந்ததை தொடர்ந்து பெண்ணின் தந்தை, தாய் மாமன், நெருங்கிய உறவினர் சேர்ந்த குழுவொன்று ஆணின் வீட்டுக்குச் சென்று சம்பந்தம் பேசுவர் மேற்படி சென்ற பெண் வீட்டாரை ஆண் வீட்டார் வரவேற்று உபசரிப்பர் அவ்விருந்துபசாரத்தின் பின்பு ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் வந்துள்ள நோக்கத்தைப் பற்றி வினாவ பெண்ணின் தந்தை நோக்கத்தை வெளிப்படுத்துவார் சில இடங்களில் அக் குழுவின் மதிப்பிற்குரி ஒருவராலும் நோக்கம் வெளிப்படுத்தப்படும் இக்கலந்துரையாடலில் சீதனம் பற்றிய பேச்சுவார்;த்தைகளும் இடம் பெறும் சீதனம் என்பது வீடு, காணி, நகை, பணம் முதலியவற்றை பெண் வீட்டார் மணமக்களுக்கு வழங்குவதைக் குறிக்கும்.

பிறகு மணமக்களுக்கு ஆறுமாத உணவு வழங்கல் முதல் பிரசவத்தின் செலவுகளை ஏற்று நடத்தல் என்பன இங்கு பாரம்பரிய வழக்கமாகும். பெற்றோர் தம்மிடமுள்ள நில புலங்களை பெண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கேற்ப பங்கீடு செய்து அவர்களின் பங்கினை சீதனமாகக் கொடுப்பதும் இதனுள் உள்ளடங்கும் எனினும் நில புலன்கள் வழங்குவது கட்டாயமானதல்ல “குடியிருக்க மனையும் ஆறுமாதச் சோறும்” என்பது இங்கு முதியோர் மொழியாக உள்ளது. பெண்பிள்ளைக்கு வீடு, சீதனம் என்பது இலட்சுமி கரமான செல்வம் என்பதாகும். வரதட்சணையெனவும் கூறுவர் வரதட்சணை என்பது மணமகனுக்கு வழங்கும் தட்சணை என்பதாகும் ஆதியில் ஆண் வீட்டார் கொடுப்பதாக இருந்து தற்போது பெண் வீட்டார் கொடுப்பதாக மாறிற்று. 

இங்கு ஒரே குடிக்குள் திருமணம் நடைபெறாது. இங்கு ஒரே குடித்திருமணத்தை தகாப் புணர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகின்றது. சீர்பாத குலக் குடிகள் எவை எவை முறையான குடிகள் என ஒருவரையறை உண்டு. அதில் சிந்தாத்திரன் குடியினர் பாட்டுவாழி குடி, முடவன் குடி இரண்டிற்கும் மண உறவு சம்மந்தக் குடிகளாகும். இதனால் சிந்தாத்திரன் குடிக்கு இவையிரண்டும் “மைத்துனன் குடி” என்றழைக்கப்படுவது மரபாகும். இவ் மரபு அவர்களது வாழ்கையில் பேணப்பட்டு இக்குடிகள் தங்களுக்குள் திருமணம் செய்கின்றமை பெருமைக்குரிய விடயமாகக் கொள்ளப்படுகின்றது. 

சிந்தாத்திரன், பாட்டுவாழி இரண்டினதும் திருமணசம்மந்தம் பற்றிய வாய்மொழி மரபிலான வரலாற்றுக்கதை ஒன்று உண்டு. சிந்தன்வழி வந்தோன் - கோரைக்கிளப்பில் சிவக் கொழுந்து என்னும் பெண்ணைக் கொண்டுவந்து திருமணம் செய்த போது சிவக்கொழுந்துவின் அண்ணன் “தங்கையின் வழித்தோன்றல்கள் சிந்தாத்திரன் குடி வழியினரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறினானாம்” அது மரபு வழி பேணப்பட்டு வந்தமையினாலே பாட்டுவாழி குடி சிந்தாத்திரன் குடிக்கு மைத்துனன் குடியாகின்றன. இதனைப் போல முடவன் குடிப்பெண் ஆரம்பத்தில் சிந்தாத்திரன் குடிப் பெண்ணைத்திருமணம் செய்திருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. இக் குடிகளைப் போன்று செம்பகநாச்சி குடிகளும் அதிகமாக ஊசாடி குடி வழியினரை திருமண உறவு கொள்ளும் குடியினராக உள்ளனர். இதனைத்தவிர ஒரேகுடிக்குள் திருமணம் செய்யாது எல்லோரும் எல்லாக் குடிவழியிலும் திருமணம் செய்கின்றனர். இங்கு பொருளாதார நிலையே திருமணத்தில் செல்வாக்கு செலுத்துகின்றது. 

சீர்பபாத சமூகத்தினர் வேறு சமூகத்தவருடன் திமணம் செய்தல் கல்வி கற்ற அரசாங்க தொழில் புரிபவர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கு சீர்பாத குலத்தில் படித்து தொழில் பெற்ற இளைஞர்கள் தங்கள் எதிர்கால வாழ்கையில் பெருளாதாரமும், நவீனத்துவம் இவை இரண்டையும் அடிப்படைக் காரணங்களாகக் கொண்டு வேறு சமூகத்தில் திருமணபந்தத்தில் இணைகின்றனர். புறத்திருமணமோ, அகத்திருமணமோ இங்கு சீதனம் என்பது முக்கியமாக உள்ளது. அதில் கல்வி கற்று தொழில் புரிபவரிடம் அதிகம் எனலாம். இங்கு தாய்வழி உரிமை பேணப்படுவதால் பெண்வீட்டாரே திருமணமான குடும்பத்திற்கு எதிர்கால வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுப்பர் அதனால் பிள்ளைக்கு வீடு, வயல், மற்றும் வீட்டுப் பொருட்கள் என்பன அவ் வீட்டின் பொருளாதார வசதிக்கு ஏற்ப பங்கிட்டுக் கொடுப்பர்.

குடும்பம்
மனித சமூதாயத்தின் மிகத் தொன்மையான நிறுவனமாகத்திகழ்வது குடும்பமாகும். இது எல்லாச் சமூகத்திலும் எல்லாக்காலங்களிலும் நிலவி வருகின்றது. மானிட வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே நிலவி வருகின்றது. இன்று நூற்றுக் கணக்கான சமூதாயங்கள் காலங்காலமாக பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு  அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பமே இன்றியமையாத, அடிப்படை அலகாக செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற குழுக்களில் பங்கு பற்றி அவர்கள் வாழ்கைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டாலும். குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகின்றது.

குடும்பம் என்பது ஒரு சிறிய குழுவாகவும் இருக்கலாம். பலர் அடங்கிய ஒரு பெருங்குழுவாகவும் இருக்கலாம். இதில் குறைந்த அளவு ஒரு ஆணும் பெண்ணும் இடம்பெற வேண்டும். இவ்விருவரும் அவர்களது சமூதாயம் ஏற்றுக் கொண்ட திருமண முறைப்படி திருமணம் செய்தவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒரு ஆணும் பெண்ணும் கணவன் - மனைவி என்னும் உறவை ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் அவர்கள் குடும்பம் வகைக்குள் உள்ளடக்கப்படுகின்றார்கள். அவர்கள் ஒரே கூரையின் கீழ் உண்டு வாழ்ந்தாலும். காலத்தின் கட்டாயத்தால் தனித்தனியாக உண்டு வாழ்ந்தாலும் கணவன் - மனைவி என்னும் பிணைப்பைக் கொண்டுள்ளவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பைக் கொண்டவர்களாவர்.

குடும்பம் என்னும் அமைப்பானது, ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமூதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமூதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்றுக் கொள்ளப்படுவர்;. அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஓர் ஆணும் பெண்ணும் காதலர்களாகவோ அல்லது வேறு வகையிலோ உறவு பெற்று உண்டு மகிழ்ந்து வந்தாலும் அவர்களிடையே சமூதாயம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கணவன் - மனைவி அமையாத உறவு வரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை உருவாக்க முடியாது. இக் குடும்பம் என்னும்  அங்கீகாரம் அந்தச் சமூதாயத்தின் அகவயக் கருத்தாக்கத்தின் மூலமே அளிக்கப்படும். சில பழங் குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே ஒரு குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம்கழித்துத்தான் திருமணம் நடைபெறும். ஆயினும் இப்பழங் குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையில் இருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகின்றதென்று எண்ணுகின்றனர்.


சீர்பாத குல குடும்ப அமைப்பு முறையினை நேக்குகையில் இங்கு இரண்டு வகையான குடும்ப அமைப்பு காணப்படுகின்றது. அவை தனிக் குடும்பம், கிளை வழி கூட்டுக் குடும்ப முறைகளே தனிக் குடும்ப முறையானது வீரமுனை உட்பட்ட சீர்பாத மக்கள் வாழ்கின்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. இங்கு தனிக் குடும்ப முறையை எடுத்துக் கொண்டால் 5அல்லது 6 பிள்ளைகள் அடங்கலாயிருக்கும். இவ்வமைப்பில் அரசாங்கத் தொழில் செய்வேராக இருந்தால் தங்கள் பிள்ளைகளை பராமரிப்பதற்காக மனைவியின் பெற்றோரையோ அல்லது கணவனின் பெற்றோரையோ தங்கள் வீட்டில் வைத்திருப்பது வழக்கமாகும். அது மட்டுமன்றி பேச்சித்திருமணங்கள் மூலம் அமையும் குடும்பங்களில் பெண்பிள்ளையின் பெற்றோரே குடும்பத்துகான மணக் கொடுப்பனவுகள்(சீதணம்) வழங்குவிப்பதனால் பெண்பிள்ளையின் பெற்றோர் இவ் வீட்டில் இருப்பது இங்குள்ள வழக்கமாகும்.

குடியேற்றக் கிராமங்களில் (படுவான் கரை) பெரும் பான்மை கிழைவளிக் கூட்டுக்குடும்பங்களே அமைந்துள்ளது. இங்கு பெண் வீட்டாரின் பெற்றோர், பிள்ளைகள் என அமைந்து காணப்படும். இதுவே கிளைவழிக் கூட்டுக் குடும்பங்களாகும். (எண்ணிக்கை 8 -11வரை அமையும்)  இங்கு திருமணமான பின் பிரிந்து செல்லும் வழக்கம் உண்டு. இங்கு பிரதான தொழில் விவசாயம் என்பதால் விவசாயத்தை மேற்கொள்ளுவதற்கு பலர் தேவை இதனால் தொழில் அடிப்படையில் கிளைவழிக் கூட்டுக் குடும்பமே அதிகமாக உள்ளது. சமூக அமைப்பில்; ஆரம்ப நிறுவனமாக விளங்கும் குடும்பங்கள் இங்கு பக்திமார்க்கத்திலும், கல்வியிலும் அதிக ஈடுபாடு உடையதாகும். குடும்பங்கள் சீர்பாத குல சமூகத்தவரிடையே பண்பாட்டு அம்சங்களை மீள் உருவாக்கம் செய்கின்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் சீர்பாத குலம் பற்றிய மரபுவளிக் கதைகளாகும். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு சீர்பாத குலம் பற்றிய எது வித ஆய்வுகளே அல்லது நூல்களோ இல்லை இந்த வகையில் சீர்பாத குலம் பற்றிய வரலாற்றுக் கதைகள் குடும்ப வழி வாய்மொழி ரீதியாக பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்துள்ளது. இதனில் உறுப்பினர் ஒருவர் என்ன குடி? அவருக்கான மைத்துனன் குடி என்ன? அவர்களுக்கான உரிமைகள் என்ன? என்பன போன்ற விடயங்களும் இவற்றோடு சேர்ந்த பிற விடயங்களும் தலைமுறையாக தலை முறையாக அறியக் கூடியதாக இருந்திருக்கின்றது. இது இன்றைய நிலையிலும்  இவற்றுக்கு குடும்பங்கள் மிகவும் பங்காற்றுகின்றன. இந்நிலை இவர்களுக்குள்ளே தங்கள் அனைவரும் ஒரு சாதியினைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வினை வளர்த்து ஒற்றுமையைநிலை நாட்டுகின்றது. 

பொருளாதாரம்
பொருள் உள்ள வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும். பொருள் மனித வாழ்க்கைக்கு ஆதாரமாகும், இதனாற் பொருளாதாரம் என்ற சொல் தோற்றம் பெற்றது. மக்கள் வாழ்விற்காக திட்மிட்ட முறையில் புறச் சூழலோடும் சமூகச் சூழல்களோடும் இடைவினை புரியும் செயல்களே பொருளாதார செயல்கள் என பொருளியல் சார் மானிடவியலாளர்கள் கூறுவர். இப் பொருளாதார நிலையை சீர்பாதக் குல மக்களின் வாழ்வினை அடிப்படையாக வைத்து நோக்குவோம்.
ஒரு சமூகத்தின் தோற்றமும். எழுச்சியும் அச்சமூகத்தின் சமூகவரலாற்றுக் காரணிகளோடும் நில வளங்களைக் கொண்டும் நிர்ணயிக்கப்படுகின்றது. அந்த வகையில் சீர்பாத குலத்தவரின் தொழில்களும் சூழலின் பாதிப்புக்கு ஏற்றவகையிலேயே அமைந்துள்ளது. அந்தவகையில் சீர்பாத குலத்தவர் அரசர், அந்தணர், வேளாளர், வணிகர் (செட்டியர்) போன்ற பல சாதிகளையும் கொண்டமைந்த ஒரு கூடடுச் சமூகம் இவர்களின் தொழில்கள் இந்தியாவில் வேறுபட்டுக்காணப்பட்டாலும் இலங்கையில் வீரமுனையில் வந்து ஓர் குலமாகியபின் இவர்களது தொழில் சூழலின் பாதிப்புக்கு ஏற்ற வகையிலே அமைந்தது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பிரதான தொழில் விவசாயம் என்பதனாலும் சீர்பாதகுலத்தவர்களின் பிரதான தொழில் விவசாயமாகக் காணப்படுகின்றது. அத்தோடு விலங்கு வேளாண்மை, வர்த்தகம், சிறுகைத்தொழில், மேசன், தச்சு என்பனவும் ஆங்கிலேயரின் வருகையின் பின் அரசாங்கத் தொழில்களும், அதன் பின் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களும், நவீனத்துவ காலமான இன்றைய காலங்களில் அரச சார்பற்ற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்று பொருள் ஈட்டுவதை அவதானிக்கலாம்.

பொருளாதார அமைப்பில் முக்கியம் பெறுவது விவசாயம் என்பதால் சீர்பாத குலமக்கள் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர். இதனால் சீர்பாத குலமக்களின் பிரதான தொழில் விவசாயமாகவுள்ளது. மூன்று வகையில் சீர்பாத குலமக்களின் விவசாய நடவடிக்கை காணப்படுகின்றது. அதனில் சொந்தமாக பூமிவைத்திருப்பவர், கோயிற் காணிகளையும், பிறர்காணிகளையும் குத்தகைக்கு எடுத்து செய்தல், கூலிக்கு நிற்றல் என்ற வகையில் விவசாயம் மேற்கொள்ளுகின்றனர். இங்கு அடம்பனார் (காணி முகாமையாளர்), போடி, வட்டவிதானை, செய்கைக்காரர், கூலிக்காரர் என்ற பெயர்கள் விவசாயத் தொழிலோடு தொடர்புடைய பெயர்களாகவுள்ளன. சீர்பாத குலத்தவர் மாரிப்போகத்தினை மழைக்காலத்திலும்,சிறு போகத்தினை குளங்கள், ஆறுகளை நம்பி மேற்கொள்ளப்படுகின்றன. சிறு போகத்தினை விட பெரும் போகமே அதிகமாகச் செய்கை பண்ணப்படுகின்றது.

பேச்சுவழக்கு
ஒரு சமூகத்தின் அம்சங்களை உணர்த்துவதில் மொழி பிரதான இடத்தினை வகிக்கின்றது எந்த மொழியினை எந்த மக்கள் பேசிகின்றார்களோ அதனூடாகவே அவர்களின் பண்பாட்டு அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். சீர்பாத குல சமூகத்தினரின் மொழியினை நோக்குகையில் இது மட்டக்களப்பு தமிழாகவே உள்ளது இச்சமூக பேச்சு சொற்கள் சில மக்களினுடைய மண்ணேடும், வாழ்க்கையோடும் தொர்புடையவையும் உயிரோட்டமானவையாகும். இதனை பின்வருமாறு பிரித்து அறியலாம்.

இடங்கள் தொடர்பான பேச்சுவழக்கு
சேனக்குடிப்பு சேனைக்குடியிருப்பு
நற்புட்டிமுனை - நற்பிட்டிமுனை
வீரமுன - வீரமுனை
சொறிக்கல்முன சொறிக்கல்முனை
மணச்சேன - மணல்சேனை
மட்டக்கிளப்பு - மட்டக்களப்பு
கொறமன்வெளி- குருமண்வெளி
மூண்டடப்புவட்ட- மூன்றடைப்பு வட்டை
நாகமோட்டுத்தெடல்- நாகமேட்டுத் தெடல்
மையத்துப்புட்டி- மையத்துப்பிட்டி
சவுக்கால - சவுக்காலை
சேனக்காடு - சேனைக்காடு
சேனவட்ட - சேனைவட்டை
தென்னங்கால - தென்னங்காலை (தோப்பு)
விலங்கினங்கள் தொடர்பான பேச்சு வழக்குச் சொற்கள்
மொயல் - முயல்
கொரங்கு - குரங்கு
கறடி - கரடி
ஆன - யானை
மோதல் - முதலை
பேச்சு வழக்கில் பயன்படும் பல தொடர்கள்
வெட்டி வெளியாக்குதல்
மல்லுக்கட்டி
கண்ணைமூக்கைப்பார்த்து
வாரிச்சுருட்டி எழும்பி
ஊரடி கம்படி
துடிச்சிப்பதச்சி
ஏறக்கட்டிப் போய்க் கெடக்கு
திறாவிக் கிறாவி
வெச வெசயா
எடுத்துப்புடிச்சி
பொலு பொலண்டு
தல தெறிக்க
கக்கூசிக்கு கிக்கூசிக்கு
டக்கெண்டு
அய்மிச்சம்
ஏத்தாப் போல
டக்குப் புக்கெண்டு
படிபுடியெண்டு

தொழிலோடு தொடர்புடைய பெயர்கள்
மோனக்காறன் - வேளாண்மை வெட்டும் குழுத்தலைவன்
தத்தி  - வேளாண்மை வெட்டுக்குழு
தட்டான்  - பொற்கொல்லன்
நொத்தாஸ்  - நொத்தாரிஸ்
கதையை ஆரம்பிக்கும் போழுது பயன் படும் பேச்சுவழககுச் சொற்கள்
ஒரு காட்டுல
ஒரு காலத்துல
அந்தக்காலத்துல
இப்பிடி இருந்து வாறகாலத்துல
இப்படி ஒருநாள்
அதால
எங்கட 

பொதுவாக அறிந்த வகையில் சீர்பாத குலம் போன்று எந்தச் சமூகத்திலும் ஒரு சமூகம் இருந்திருக்க முடியாது. இச்சமூகம் அரசர், அந்தனர், வனிகர், வேளாளர் என வேறுபட்ட அந்தஸ்த்தையும் தொழில்களையும் கொண்டு பல வகுப்பினரை இணைந்த கூட்டுச் சமூகமாகும். இதனால் தான் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை “சீர்பாதகுல வரலாறு” என்னும் நூலிற்கு தான் வழங்கிய மதிப்புரையில் சீர்பாதகுலம் சில நல்ல குணங்களையுடைய ஒரு கூட்டுச்சமூகம் என குறிப்பிட்டுள்ளார். பல சாதியியனர் சேர்ந்து ஒரு குலமாகியமை சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தியதால் இது ஒரு ஒற்றுமையின் சின்னம் எனலாம். 
  
தமிழர் பண்பாடு விருந்தோம்பலில் சிறந்தது இவ்விருந்தோம்பலுக்கு உரியயவர் சீர்பாதகுலத்தினர் என்று கூறினால் அது மிகையாகாது.; சீர்பாத குலத்தவர்கள் வாழும் இடத்திற்குச் சென்றால் விருந்தோம்பாமல் வர முடியாது என வேறு சமூகத்தினர் கூறியிருக்கின்;றார்கள். இதனால்தான் சீர்பாத குலத்தவர்கள் கருணபரம்பரை ஒத்தவர்கள் எனக் குறிப்படுகின்றது.

எது எவ்வாறெனினும் சீபாத சமுகத்தார் சோழ இளவரவசி சீர்பாததேவியுடன் வந்த அரச பரம்பரையினர் என்ற பெருமையுடன் பல நற்பண்பகளையும் நல்லதொரு சமுதாய அமைப்பினையும் உள்ளடக்கியவர்களாக கிழக்கிலங்கையில் அழியாச் சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

-முற்றும் -

ஊசாத்துணை நூல்கள்

நூல்கள்
  1. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், 1990, புதுவைமொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
  2. அருள்செல்வநாயகம். சீர்பாதகுல வரலாறு 1982- திருவருள்வெளியீடு குருமண்வெளி
  3. F.X. நடராசா, மட்டக்களப்பு மான்மியம், 1962,
  4. சா.தில்லைநாதன், மட்டக்களப்பு இந்து சமய கலாசாரம், 2006, மணிமேகலைப்பிரசுரம், சென்னை.
  5. அண்ணல் அம்பேத்கார். இந்தியாவில் சாதிகள் 1987, சமூகநீதி பதிப்பகம், திருப்பூர்
  6. F.X. நடராசா,(தொகுப்பு ) மட்டக்களப்பு மக்கள் வளமும் வாழ்க்கையும், 1980, இந்து வாலிபர் வெளியீடு மட்டக்களப்பு.
  7. வெல்லவூர்கோபால். மட்டக்களப்பு வரலாறு ஓர் அறிமுகம்- 2006 manuvedh மட்டக்களப்பு. 
  8. பேராசிரியர் மௌனகுரு, மட்டக்களப்பு மரபுவழிநாடகங்கள் 1998, விபுலம் வெளியீடு மட்டக்களப்பு.
  9. ராகுல் சாங்கித்தியன், மனித சமூதாயம், 2003
  10. ராகுல் சாங்கித்தியன், மனித சமூதாயம், 200310. சி.மௌனகுரு, மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப்பண்பாடு, 2003, 2ம் உலக இந்துமாநாடு-மட்டக்களப்பு பிரதேசக்கிளை.
  11. பக்தவத்சலபாரதி, தமிழர் மானிடவியல், 2002 புதுவைமொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
சஞ்சிகைகள்
  1. குருமண்வெளி சித்திவிநாயகர் ஆலயநிருவாக சபை- சித்திவிநாயகர்;     ஆலய கும்பாபிசேக சிறப்பு மலர் 2004, வனசிங்க அச்சகம்.
  2. ம.தெ.எ.பற்று பிரதேச சபை- எழுவான்,2006,துறைநீலாவணைமுன்னேற்றப்படுத்தல் அமையம்- முதலாம் ஆண்டு நிறைவு விழா,2004 

பத்திரிகைகள்
  1. தினக்குரல் 15.06.1990
  2. வீரகேசரி 24.12.1988  
  3. மித்திரன் வாரமலர் 28.07.1991 
  4. தினக்குரல் 27.07.2003